பக்கம் எண் :

முதற் காண்டம்42

     மகளிர் வந்து தோன்றலால் கதிரவன்கள் சோலை இருளினிடையே
வந்து உதித்தன என்று மகிழ்ந்த மாமரத்துக் குயில்கள் அவற்றைத்
துதித்ததுபோல் பாடின. ஒளி பொருந்திய அன்னம் தன் தூய நடையை
அம்மகளிருக்குக் கற்பித்ததுபோல் முன்னே நடந்தது. குளிர்ச்சி பொருந்திய
மாலையை அணிந்த அம்மகளிர் அத்தடத்தின் மீது தம் மெல்லிய
அடியைப் பதித்ததுபோல் நடந்து சென்றனர்.
  
                   51
இன்னிறப் பிறைக்கதிர் திரட்டி யீட்டெனாப்
பன்னிறத் தலர்ந்தபூப் படர்ந்த காவிடைக்
கொன்னிறத் தலர்ந்தெனக் கொய்து கொய்துதா
மின்னிறத் தடவிசூழ் விரும்பி யேகுவார்.
 
இன் நிறப் பிறைக் கதிர் திரட்டி ஈட்டு எனா,
பல் நிறத்து அலர்ந்த பூ படர்ந்த காஇடை,
கொன் நிறத்து அலர்ந்து எனக் கொய்து கொய்து தாம்
மின் நிறத்து அடவி சூழ் விரும்பி ஏகுவார்.

     கண்ணுக்கு இனிய ஒளியுள்ள பிறைச் சந்திரனின் கதிர்களைத் திரட்டித்
தொகுத்தாற்போல், பல நிறங்களோடு மலர்ந்த பூக்கள் பரந்து கிடந்த
சோலையில், இவையெல்லாம் அழகிய நிறத்தோடு மலர்ந்து வீணே கிடந்தன
என்று கொய்து கொய்து, மின்னலின் தன்மையில் அம்மாதர் அச்சோலையை
விருப்பத்தோடு சுற்றி நடந்து செல்வர்.
  
                    52
கொள்ளைகண் டளியினங் கூவென் னோதையுங்
கிள்ளைகண் டினைவபோற் கீயென் னோதையும்
வள்ளைகொண் டினிதிசை மறலப் பாடினர்
வெள்ளைகொண் டுளபல நிறத்த வீகொய்வார்
 
கொள்ளை கண்டு அளி இனம் கூ என் ஓதையும்,
கிள்ளை கண்டு இனைவ போல் கீ என் ஓதையும்
வள்ளை கொண்டு இனிது இசை மறலப் பாடினர்,
வெள்ளை கொண்டு உள பல நிறத்த வீ கொய்வார்

     மலர்களை அம்மாதர் கொள்ளையிடுதலைக்கண்டு வண்டினங்கள்
கூ கூ வென்று எழுப்பும் ஓசையும், கிளிகள் கண்டு வருந்துவன போல்
கீ கீ யென்று எழுப்பும் ஓசையும் தம்முள் மயங்குமாறு, அம்மாதர் தம்
வள்ளைப் பாட்டை இனிய இசையோடு பாடியவராய், வெள்ளை
முதற்கொண்டு அங்குள்ள பல நிற மலர்களையும் பறித்தெடுப்பர்.