பக்கம் எண் :

முதற் காண்டம்43

     வள்ளை - தலைவர்தம் கொடை வீரம் முதலிய சிறப்புக்களை மகளிர்
உலக்கைப் பாட்டில் அமைத்துப் பாடுதல்.
  
                53
ஐம்மணி பவளமுத் தம்பொ னிற்றெலாம்
பம்மணி பெறவரும் படலை கோத்தெனப்
பொம்மணி மலரெலாம் புணர் பொன் னூலினாற்
றம்மணி யிணையெனத் தார்பி ணிக்குவார்.
 
ஐ மணி பவளம் முத்து அம் பொன் இற்று எலாம்,
பம்மு அணி பெற அரும் படலை கோத்து என,
பொம்மு அணி மலர் எலாம் புணர் பொன் நூலினால்,
தம் அணி இணை என, தார் பிணிக்குவார்.

     சிறந்த பவளமும் முத்தும் போன்ற மணிகள், அழகிய பொன்
இத்தகைய எல்லாம் கொண்டு, நெருக்கமாய் அழகு பொருந்த அரிய
படலை மாலையாகக் கோத்தது போல், மிகுந்த அழகுள்ள
மலர்களையெல்லாம் இணைக்கும் பொன்மயமான நூல் கொண்டு, தமது
அழகிற்கு இணையாகும்படி, மாலையாகக் கட்டுவர்.
   
                  54
பிணித்ததார் விரலின்மேற் பிரளக் காட்டுவா
ரணித்தகா துனதென விசலி யார்த்தபின்
றணித்தபூ ணொட்கலஞ் சவிக்கி லுத்தங்கள்
பணித்தபூம் புகைக் குழல் படியச் சூடுவார்.
 
பிணித்த தார் விரலின் மேல் பிரளக் காட்டுவார் :
''அணித் தகாது உனது!'' என இசலி ஆர்த்த பின்,
தணித்த பூண் ஒள் கலம் சவிக் கிலுத்தங்கள்
பணித்த பூம் புகைக் குழல் படியச் சூடுவார்.

     அம்மாதர் தாம் தாம் கட்டிய மாலையைத் தத்தம் விரலின் மேல்
சுழல விட்டுப் பிறருக்குக் காட்டுவர் : ''உன்னுடையது அணியத் தகாது!''
என்று தம்முள் வாதிட்டுச் சிறிதுநேரம் ஆரவாரம் செய்வர். பின், தொங்கிய
ஆபரணமுள்ள ஒளிபொருந்திய தம் மார்புகளிலும், அழகிய மணிக்கட்டு
களிலும், மெல்லிய மணப்புகை ஊட்டிய கூந்தல்களிலும் படியுமாறு
சூடிக்கொள்வர்.