பக்கம் எண் :

முதற் காண்டம்44

     'ஓட்கலம்' என்ற விடத்து 'அகலம்' என்ற சொல் முதல் குறை
விகாரம் பெற்றுக் 'கலம்' நின்றது.
   
                55
முருகுவிம் மியமலர் குடைந்து மூழ்குதேன்
பருகுவிம் மியவளி பசித விர்ந்தபின்
னருகுவிம் மியதென வலர்கொய் மங்கைய
ருருகுவிம் மியகளிப் புயிர்த்துப் பாடுவார்.
 
முருகு விம்மிய மலர் குடைந்து, மூழ்கு தேன்
பருகு விம்மிய அளி, பசி தவிர்த்த பின்
அருகு விம்மியது என, அலர் கொய் மங்கையர்
உருகு, விம்மிய களிப்பு உயிர்த்துப் பாடுவார்.

     வாசனையைப் பரப்பிய பூக்களைக் குடைந்து, உள்ளே மூழ்கிக்
கிடந்த தேனைப் பருகும் போதும் இரைந்த வண்டுகள், பசி நீங்கிய பின்
அப்பூக்களின் அருகே இரைந்தது போல, பூக்களைப் பறிக்கும்
அம்மகளிரும் ஆசையால் உருகி, பெருகிய களிப்பினால் குரலெடுத்துப்
பாடுவர்.

     பருகு, உருகு என்பன, பருகி உருகி என வினையெச்சப் பொருளில்
நின்றன. அம்மகளிர் பாடிய பாடல் 58-63 காண்க.
    
                56
பூமலி சேக்கைமேற் பொலிந்து நூற்படி
பாமலி பதத்தறம் பழிச்சிப் பங்கயத்
தேமலி சேக்கைமேற் சிறந்த வோதிம
நாமலி யினிதிசை நாணப் பாடுவார்.
 
பூ மலி சேக்கை மேல் பொலிந்து, நூல்படி,
பா மலி பதத்து அறம் பழிச்சி, பங்கயத்
தேன்மலி சேக்கை மேல் சிறந்த ஓதிம
நா மலி இனிது இசை நாணப் பாடுவார்

     அம்மாதர் பூக்கள் நிறைந்த மெத்தையின்மேல் பொலிவுடன்
அமர்ந்திருந்து, தேன் நிறைந்த தாமரை மலராகிய படுக்கைமேல் சிறந்து
தங்கிய அன்னத்தின் நாவில் நிறைந்து பிறந்த இசையும் நாணுமாறு, வேத
நூல் முறைப்படி, பாக்களுக்குரிய நிறைவான சொல் அமைப்போடு
புண்ணியத்தைப் புகழ்ந்து பாடுவர்.