பக்கம் எண் :

முதற் காண்டம்420

     இருள் பரந்த ஐயத்தோடு அதனால் ஏற்பட்ட துயரமும் ஒருங்கே
களைந்து இன்பக் கடலில் மூழ்கிய ஒள்ளிய தவத்தில் மிக்கோனாகிய சூசை
தன் உள்ளத்தில் எழுச்சி கொள்ளுமாறு தெளிவு பொருந்திய ஒரு
திருக்காட்சி கண்டான். அக்காட்சியில் புகழுரை யாவற்றிலும் மேம்பட்டு
நின்ற மரியாள், விண்ணுலகைத் தம் உறைவிடமாகக் கொண்ட வானோர்
பாடியதைக் கேட்ட பெருமகிழ்ச்சியால், தன் உயிர் சென்ற இடத்தை நோக்கி
ஒற்றைச் சக்கரத்தோடு பரந்த ஒளிகொண்ட ஆதவனை ஆடையாக உடுத்த
தன் உடலும் உடன் சென்றாற்போல, தன்னைச் சுற்றிலும் பொன் மயமான
பரந்த கதிரை வீசும் உருவத்தோடு தோன்றி, இம் மண்ணுலகில்
நிலைகொள்ளுதலை விடுத்து, உயர்ந்த வானத்தில் சென்று காட்சி தந்து
நின்றாள்.
 
              45
நின்றநிலை தன்மையுமன் றாய யாவு
     நினைத்துரைப்ப நின்றாடான் றனக்கா வாய்நான்
சென்றநிலை கண்டிரங்கித் துணிவும் பாவுந்
     திருத்தித்தந் தாலல்லாற் றுறைவல் நான்னூல்
வென்றநிலை கொண்டவுணர் வோர்க்கும் பாலோ
     விண்வியப்ப நீவியப்ப விருப்ப மூழ்கி
மன்றனிலை வாகையினோ யன்று கண்ட
     மாட்சிநல மியானிசைப்பத் துணையே நிற்பாய்.
 
நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து
      உரைப்ப, நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான்
சென்ற நிலை கண்டு இரங்கி, துணிவும் பாவும்
      திருத்தித் தந்தால் அல்லால், துறை வல் நல் நூல்
வென்ற நிலை கொண்ட உணர்வோர்க்கும் பாலோ?
      விண் வியப்ப நீ வியப்ப விருப்பம் மூழ்கி
மன்றல்நிலை வாகையினோய், அன்று கண்ட
      மாட்சி நலம் யான் இசைப்பத் துணையே நிற்பாய்

     மரியாள் வானில் நின்ற நிலையின் இயல்பும் அன்று அங்கு நிகழ்ந்த
எல்லாவற்றையும் நான் எண்ணிப் பார்த்துச் சொல்வ தென்றால், நின்ற
அவள் தானே தனக்கு அடிமையாகிய நான் சொல்லத் துணிந்து சென்ற
இந்நிலை கண்டு இரக்கங்கொண்டு, அதற்கு வேண்டிய துணிவையும்
செய்யுள் வளத்தையும் என்னோடு துணை நின்று திருத்தித் தந்தால்
அல்லாமல் -