பக்கம் எண் :

முதற் காண்டம்421

எனக்கு மட்டும் என்ன? - பல கல்வித் துறையிலும் சிறந்த நல்ல
நூல்களையெல்லாம் கற்று வென்ற நிலையான உணர்வுடையோர்க்கும், அது
இயலுவதோ? மணம் நிலைத்த மலர்க்கொடியை உடைய சூசை முனிவனே,
விருப்பத்தில் மூழ்கி விண்ணுலகம் வியக்கவும் நீ வியக்கவும் அன்று கண்ட
இக்காட்சியின் மாட்சி நலத்தைத் தகுந்தவாறு நான் எடுத்துச் சொல்ல
நீயுமே துணையாக நிற்பாய்.

     காட்சித் தந்த மரியாளையும், கண்ட சூசையையும் ஆசிரியர்
அதனை எழுதிக் காட்டத் தமக்குத் துணை வேண்டிய பாடல் இது.
இதுவே, புனிதர்களை வணங்கி வேண்டுதல் இறைவன் அருளைப்
பெறுதற்கு வழியாம் என்பதனை இலை மறை காயாய்க் காட்டியதும்
ஆகும்.

     நலம் + யான் - நலமியான் : தன் ஒழி மெய் முன் யகரம் வர
இடையே இகரம் தோன்றியது.
 
                    46
விண்கதிர்கா லுருத்தோன்றி விண்ணி னின்றாள்
         விரதநிலை யிதோவென்ன வளர்ந்து தேயுந்
தண்கதிர்கால் பிறைக்குழவி யடியா றேய்த்துத்
         தனைச்சென்றார் சிதையாரென் றிரவிமுன்னுந்
தெண்கதிர்கா லுடுக்குல மே முடியாய்ச் சூடித்
        தெளிஞான நிலையிதெனச் சுடாது தண்ணத்
தொண்கதிர்கால் செஞ்சுடரை யுடுத்து நின்றா
      ளுணர்வினுமே னின்றினிதென் னுளத்தி னின்றாள்.
 
விண் கதிர் கால் உருத் தோன்றி விண்ணில் நின்றாள்;
     'விரத நிலை இதோ?' என்ன, வளர்ந்து தேயும்
தண் கதிர் கால் பிறைக் குழவி அடியால் தேய்த்து,
     தனைச் சென்றார் சிதையார் என்று, இரவி முன்னும்
தெண் கதிர் கால் உடுக் குலமே முடியாய்ச் சூடி,
     'தெளி ஞான நிலை இது,' என சுடாது தண்ணத்து
ஒண் கதிர் கால் செஞ் சுடரை உடுத்து நின்றாள்,
   உணர்வினும் மேல் நின்று, இனிது என் உளத்தில் நின்றாள்.

     உணர்வுக்கும் எட்டாது மேலோங்கி நின்றும், என் உள்ளத்தில்
இனிதாக நிலைகொண்ட மரியாள், அன்று விண்ணுலகத்தாருக்கு உரிய
கதிர் பொழியும் உருவத்தோடு தோன்றி வானத்தில் நின்றாள். 'விரதத்தின்
தன்மை