பக்கம் எண் :

முதற் காண்டம்424

கடல் சூழ்ந்த மண்ணுலகில் தமது அரசியாகக் கொண்டு புடை சூழ்ந்து
இருக்குமாறு அவ்வானுலக ஆண்டவன் அன்புகூர்ந்து கட்டளையிட்டான்.

     சதுரகராதியின் தொகையகராதிப் பிரிவிற் கண்டபடி, "வானோர் கணம்
9: (1) பத்திச் சுவாலகர் - கடவுளைக் குறித்த பத்தியினாலே சுவாலிக்கிறவர்;
(2) ஞானாதிக்கர் - கடவுளைக் குறித்த ஞானத்தில் ஆதிக்கம் பெற்றவர்; (3)
பத்திராசனர் - கடவுள் எழுந்தருளியிருக்கும் தேவ சிங்கா தனத்தைப்
புகழ்ந்திருப்பவர்; (4) நாதகிருத்தியர் - நாதனுடைய கிருத்தியத்தை அவன்
அருளாற் புரிபவர்; (5) சத்துவகர் - கடவுள் அருளாற் பற்பல

அற்புதங்களைச் செய்யும் சத்துவம் பெற்றவர்; (6) பலவத்தர் - கடவுள்
திருவுளப்படி எய்துங் கருமங்கட்கு வரும் இடையூற்றை அவன் அருளால்
தடுக்கும் பலாத்காரம் பெற்றவர்; (7) பிராதமிகர்- கடவுள் திருவுளப்படியே
இராச்சிய சம்பந்தமான சாதாரண நன்மைகளை நடத்தும் தலைமை
பெற்றவர்; (8) அதிதூதர் - அதிகப் பிரதான விசேடங்களை உலகத்தில்
அறிவிக்கத் தனாபதியாக வருபவர்கள்; (9) தூதர்-மனிதர் பிறந்த கணம்
முதலாகத் தனித்தனியே அவரவரைப் பாதுகாத்து நன்னெறியில் நடத்தி,
மற்றும் பிரதான விசேடங்கட்கு அனுப்பப்படுபவர்.
 
                   49
ஏவியவா றிவட்பிரியா வன்னா ரிந்நா
     ளெழில்முகத்தில் வான்முகத்தைத் தோன்றத் தோன்றிப்
பூவியவா றரக்கொளிபெய் துகிலு டுத்துப்
     பொழிமதுவா டாதமலர்ச் சுடிகை சூடி
யாவியவா றணியணியாய் நின்ற யாரு
     மாண்டகைதாய் மரியென்னும் வாச கத்தை
மேவியவா றோங்கியமார் பணிந்து வெய்யோன்
     வேய்ந்தனைய வவ்வணிவேய்ந் தினிதி னின்றார்.
 
ஏவிய ஆறு இவட் பிரியா அன்னார், இந்நாள்
      எழில் முகத்தில் வான் முகத்தைத் தோன்றத் தோன்றி,
பூவிய ஆறு அரக்கு ஒளி பெய் துகில் உடுத்து,
      பொழி மது வாடாத மலர்ச் சுடிகை சூடி,
ஆவிய ஆறு அணி அணியாய் நின்ற யாரும்,
      'ஆண்டகை தாய் மரி' என்னும் வாசகத்தை
மேவிய ஆறு ஓங்கிய மார்பு அணிந்து, வெய்யோன்
      வேய்ந்து அனைய அவ் அணி வேய்ந்து இனிதின் நின்றார்.