பக்கம் எண் :

முதற் காண்டம்427

உலாவும் கொழுமையான குளிர்ந்த தேனுள்ள இரோசை என்னும்
மலர்களால் தொடுத்த நூறு மாலைகளைக் கொண்டு வந்து, பகலவனின்
அழகை வீழ்த்திய சிறிய அடிகளைப் போற்றி, அணியாக முன்னே
படைத்து வைத்தனர்.

     சீறடி - சிறுமை + அடி. 'இரோசை' என்றாரேனும், 'உரோசை'
என்பதே மரபு, 'உரோமம்' என்றாற் போல. 'அன்றோ' அசைநிலை.
 
                   52
வீடவிழ்த்த நலங்காட்டும் வனப்பி னல்லாள்
     விரிபுவிமன் னுயிர்களெலா மின்புற் றுய்யக்
கேடவிழ்த்த நெஞ்சினர்க்கு முறுதி செய்யுங்
     கிளர்த்தனதன் றயாபநலங் காட்டு தற்கே
நீடவிழ்த்த வாயிடத்துப் பிரிந்தொ டும்பன்
     னீர்க்கெல்லா மடைக்கலஞ்செய் வாவி பூத்த
தோடவிழ்த்த விரைக்கமல மாலை மாற்றிச்
     சூடியதா டொழுகின்றா ரொருநூ றன்றோ.
 
வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள்,
     விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்பு உற்று உய்ய,
கேடு அவிழ்த்த நெஞ்சினர்க்கும் உறுதி செய்யும்
     கிளர்ந்தன தன் தயாப நலம் காட்டுதற்கே,
நீடு அவிழ்த்த வாய் இடத்துப் பிரிந்து ஓடும் பல்
     நீர்க்கு எல்லாம் அடைக்கலம் செய் வாவி பூத்த
தோடு அவிழ்த்த விரைக் கமலம் மாலை மாற்றி,
     சூடிய தாள் தொழுகின்றார், ஒரு நூறு அன்றோ.

     வான் வீட்டில் பரந்து கிடந்த நலங்களைக் கொண்டு காட்டும் அழகை
உடைய நல்லவளாகிய மரியாள், விரிந்த மண்ணுலகில் நிலைபெற்ற மனித
உயிர்கள் எல்லாமே இன்பம் அடைந்து உய்ய வேண்டுமென்று, பாவங்களைக்
கட்டுப்பாடின்றி அவிழ்த்து விட்ட மனம் படைத்தோர்க்கும் நன்மையே
செய்யும் தன் பெருகிய இரக்கத்தின் நலத்தை எடுத்துக் காட்டும்
நோக்கத்தோடு, நெடிதாய் அவிழ்த்துவிட்ட வாய்க்கால்களிடமாய்ப் பிரிந்து
ஓடும் பலவகை நீர்களுக்கெல்லாம் இறுதியில் புகலிடம் தரும் தடாகத்தில்
தோன்றிய இதழ் விரித்த மணமுள்ள தாமரைப் பூக்களைத் தொடுத்து
மாலையாக மாற்றி, மூன்றாம் அணியாய் நூறு வானவர் அம்மாலைகளைச்
சூடிய அவள் அடிகளைத் தொழுகின்றனர்.