| 'அன்றோ'
அசை நிலை.
| 53 |
துறைகெழுநூல்
வழியனைத்து மடையா ஞானத்
துறையன்னாள் மாசறுநல் லுணர்வி னீர்த்து
மறைகெழுநூல் வழிவழுவா கடவு ணற்றாள்
மாறிலமெய்ஞ் ஞானநல மமைந்த தற்கே
முறைகெழுநூல் வழியன்ன வெய்யோன் வானின்
முடுகுவழி விடாதிரியு மிரவிக் காந்த
மறைகெழுநூல் வழித்தொடைபோற் றொடைய லாக்கி
யருச்சனைசெய் தடியணிந்தா ரொருநூ றன்றோ. |
| |
துறை கெழு நூல்
வழி அனைத்தும் அடையா ஞானத்
துறை அன்னாள், மாசு அறு நல் உணர்வின் நீர்த்து,
மறை கெழு நூல் வழி வழுவா, கடவுள் நல் தாள்
மாறு இல மெய்ஞ் ஞான நலம் அமைந்ததற்கே,
முறை கெழு நூல் வழி அன்ன வெய்யோன் வானின்
முடுகு வழி விடா திரியும் இரவிக் காந்தம்,
அறை கெழு நூல் வழித் தொடை போல் தொடையல் ஆக்கி,
அருச்சனை செய்து, அடி அணிந்தார் ஓரு நூறு அன்றோ. |
பல்வேறு துறைகளாக
நிறைந்து கிடக்கும் அனைத்து அறிவு நூல்கள்
வழியாகவும் அடைய இயலாத ஞானத் துறைமுகம் போன்ற மரியாள், மாசற்ற
நல்லுணர்வினால் சிறந்து, வேதப் பொருள் நிறைந்த தெய்வ நூல் காட்டும்
நெறியில் வழுவாமல் கடவுளின் நல்ல அடிகளை விட்டு விலகுதல் இல்லாத
மெய்ஞ் ஞானத்தின் நலம் அமைந்து விளங்கும் தன்மையைக் குறித்துக்
காட்டும் நோக்கத்தோடு, நீதி முறை பொருந்திய நூல் காட்டும்
நேர்வழிபோல பகலவன் வானத்தில் செல்லும் வழியைத் தாமும் விடாமல்
அப்பக்கமாகத் திரும்பும் சூரியகாந்தி மலர்களை, ஓசை நலம் பொருந்திய
செய்யுள் நூல் இயற்றக் கருவியாக விளங்கும் எதுகை மோனை முதலிய
தொடை போல், சிறப்புற அமைந்த மாலையாகக் கட்டி, நான்காம்
அணியினராய் நின்ற நூறு வானவர் அவள் அடியைப் பூசனை செய்து
அணிந்தனர். |