பக்கம் எண் :

முதற் காண்டம்429

                    54
மாசென்று மதியமிதித் துயர்தூய் தாளாள்
     மனங்கலங்கத் துயர்வரினு நெருப்பிற் கஞ்சாத்
தேசென்று குலையாநெஞ் சுருதி யெஞ்சா
     செல்லல்லற் குயர்ந்ததிறங் காட்டு தற்கே
தூசென்று மலைசூழ்ந்தொல் லெனத்தா ழோடித்
     துறும்வெள்ளத் தளவிறலை நிறுவிப் பூண்ட
காசென்று தேன்றுளிக்குங் குமுத மாலை
     காலணியாய்த் தொழுதிடுவா ரொருநூ றன்றோ.
 
மாசு என்று மதியம் மிதித்து உயர் தூய் தாளாள்,
    மனம் கலங்கத் துயர் வரினும், நெருப்பிற்கு அஞ்சாத்
தேசு என்று குலையா நெஞ்சு உறுதி எஞ்சா,
           செல் அல்லற்கு உயர்ந்த திறம் காட்டுதற்கே,
தூசு என்று மலை சூழ்ந்து ஒல் எனத் தாழ்ஓடித்
        துறும் வெள்ளத்து அளவில் தலை நிறுவி, பூண்ட
காசு என்று தேன் துளிக்கும் குமுத மாலை
  கால் அணியாய்த் தொழுது இடுவார், ஒரு நூறு அன்றோ.

     மாசு உடையதென்று மதியை மிதித்து அதன்மேல் உயர்ந்து நிற்கும்
தூய திருவடிகளை உடைய மரியாள், தன் மனம் கலங்கும்படியான
துயரங்கள் வந்தாலும், நெருப்பிற்கு அஞ்சாத பொன்னைப் போலக்
குலையாத மனவுறுதி சிறிதும் குறையாமல், வரும் துன்பங்களுக்கெல்லாம்
மேலாக உயர்ந்து நிற்கும் தன்மையை எடுத்துக் காட்டும் நோக்கத்தோடு,
ஆடையாக மலையைச் சூழ்ந்து ஒல்லென ஒலித்துக் கீழே பாய்ந்து
குளத்தில் வந்து பெருகும் அருவி வெள்ளத்தின் அளவுக்குத் தக்கபடி
தன் தலையை நிமிர்த்து, இதழ்களின் உள்ளே அணிந்த மணியைப்
போல் தேனைச் சொரியும் அல்லி மலர்களால் தொடுத்த மாலைகளை
ஐந்தாம் அணியாய் நின்ற நூறு வானவர் தொழுது அவள் கால்களுக்கு
அணியாய் இட்டு வைப்பர்.