பக்கம் எண் :

முதற் காண்டம்430

                  55
மட்பொதுளுஞ் சேற்றொழுகுங் கதிர்சே றாகா
     வண்ணமெனக் கதிர்கலங்கிற் கலங்கா நெஞ்சாள்
கட்பொதுளு மின்னாமைக் கழுக்கு றாதாள்
     கதிரினுந்தூய் மாட்சிநல மணிந்த தற்கே
முட்பொதுளு மணம்பொதுளு நொய்யந் தாது
     முருகொழுகு முகைவிண்ட செஞ்செவ் வந்தி
விட்பொதுளு நலந்தொடுத்த மாலை யாக
     விழுந்திறைஞ்சிக் கொணர்ந்தனரே யொருநூ றன்றோ.
 
மண் பொதுளும் சேற்று ஒழுகும் கதிர் சேறு ஆகா
    வண்ணம் என, கதிர் கலங்கின் கலங்கா நெஞ்சாள்,
கண் பொதுளும் இன்னாமைக்கு அழுக்கு உறாதாள்,
         கதிரினும் தூய் மாட்சி நலம் அணிந்ததற்கே,
முள் பொதுளும் மணம் பொதுளும் நொய் அம் தாது
        முருகு ஒழுகும் முகை விண்ட செஞ் செவ்வந்தி
விண் பொதுளும் நலம் தொடுத்த மாலையாக
    விழுந்து இறைஞ்சிக் கொணர்ந்தனரே ஒரு நூறு அன்றோ.

     மண்ணில் மண்டிக் கிடக்கும் சேற்றில் பாயும் கதிரவனின் கதிர் தான்
சேறாகாத தன்மை போல, சேறு கலங்கக் கதிர் கலங்கினாலும் தான் எந்த
நிலையிலும் கலங்குதல் இல்லாத நெஞ்சம் படைத்தவளும், கண் வழியாக
வந்து குவியும் தீமைகளைப் பொறுத்தமட்டில் தான் எவ்வித அழுக்கும்
அணுகாதவளும் ஆகிய மரியாளின் கதிரினும் தூய்மையான மாட்சி
நலத்தைப் புனைந்து காட்டும் பொருட்டு, முள் நிறைந்து மணம் நிறைந்து
மெல்லிய அழகிய இதழ்களினின்று தேன் பொழியும் மொட்டு விரிந்த
செந்நிறமான செவ்வந்தி மலர்களை விண்ணுலகில் நிறைந்து கிடக்கும்
நன்மைகளோடு கூட்டித் தொடுத்த மாலையாகச் செய்து, அவள் அடியில்
விழுந்து வணங்கி ஆறாம் அணியாய் நின்ற வானவர் நூறு மாலைகளைக்
கொணர்ந்து இட்டு வைத்தனர்.

     செவ்வந்திக்கு 'முள்' என்றது அதன் கொடிக் கிளைகளின் முருட்டுத்
தன்மை கருதியது. வெண் செவ்வந்தியும் உளதாதலின், செஞ்செவ்வந்தி என
வேறுபாடு கூறப்பட்டது. செவ்வந்திக்குச் செம்மை கூறியது, 'செம்பொன்'
என்றாற் போல, மஞ்சட் பொன்மை நிறம் கருதியாகக் கொள்க.