| 56 |
இத்திறத்தால்
வெஞ்சுடரு மெஞ்ச வெஞ்சா
தியல்புயர்ந்தா ளின்பருந்திச் செயிர்நாஞ் செய்த
வத்திறத்தால் வந்ததவஞ் செயிரொன் றின்றி
யரிதுலக மதிசயிப்ப நோற்றா ளென்னா
மைத்திறத்தால் விரிசிறகை யோச னித்த
வண்டணுகாச் சண்பகவந் தொடையை யன்றே
மெய்த்திறத்தான் மறைதொடுத்த தொடைய லென்னா
விசித்தணிந்தார் தாள்வணங்கி யொருநூ றன்றோ. |
| |
இத்திறத்தால்
வெஞ் சுடரும் எஞ்ச எஞ்சாது
இயல்பு உயர்ந்தாள், இன்பு அருந்திச் செயிர் நாம் செய்த
அத்திறத்தால் வந்த தவம் செயிர் ஒன்று இன்றி
அரிது உலகம் அதிசயிப்ப நோற்றாள் என்னா,
மைத்திறத்தால் விரி சிறகை ஓசனித்த வண்டு அணுகாச்
சண்பக அம் தொடையை, அன்றே,
மெய்த்திறத்தால் மறை தொடுத்த தொடையல் என்னா
விசித்து, அணிந்தார், தாள் வணங்கி, ஒரு நூறு அன்றோ. |
மேலே
காட்டிய இத்தன்மையால் கதிரவனும் குறைபடத்தான்
குறைபடாமல் தன் இயல்பிலே உயர்ந்தவளாகிய மரியாள், சிற்றின்பத்தை
அருந்தி நாம் பாவத்தைச் செய்த அத்தன்மையால் நமக்கென்று ஏற்பட்ட
தவத்தை தான் பாவம் ஒன்றும் இல்லாமலே உலகம் அரிதென்று வியக்கும்
வண்ணம் முயன்று செய்தாள் என்று காட்டும் பொருட்டு, கரிய நிறத்
தன்மையோடு விரித்த சிறகை அடித்துக் கொண்ட வண்டுகள் அணுகுதல்
இல்லாத சண்பக மலர்களாலாகிய அழகிய மாலைகளை உண்மைத்
தன்மையால் வேத விதிகளைத் தொடுத்த மாலை போல் அன்றே ஏழாம்
அணியாய் நின்ற வானவர் ஒரு நூறு கட்டி எடுத்துக் கொண்டு வந்து,
அவள் அடியை வணங்கி அணிந்தனர்.
'அன்றோ'
அசைநிலை. |