| 57 |
வானாரு நடுக்குற்று
வணங்குந் தேவ
வரத்துயர்ந்த வானரசா ணவைநா மாறா
கூனாருஞ் செருக்காறாத் திறத்தி னாணக்
குணிக்கரிய தாழ்ச்சியருள் கொண்டா ளென்னாத்
தேனாரு மலரினத்துட் புன்மை கொண்டு
தேறலொடு மணத்தினொடு மெவையும் வெல்லுங்
கானாரும் வகுளம்பூ மாலை தாண்மேற்
களிப்பெழவிட் டிறைஞ்சுகின்றா ரொருநூ றன்றோ. |
| |
வானரும் நடுக்கு
உற்று வணங்கும் தேவ
வரத்து உயர்ந்த வான் அரசாள், நவை நாம் மாறா
கூன் ஆரும் செருக்கு ஆறாத் திறத்தின் நாண,
குணிக்க அரிய தாழ்ச்சி அருள் கொண்டாள் என்னா
தேன் ஆரும் மலர் இனத்துள் புன்மை கொண்டு,
தேற லொடும் மணத்தி னொடும் எவையும் வெல்லும்
கான் ஆரும் வகுளம் பூ மாலை, தாள் மேல்
களிப்பு எழ இட்டு இறைஞ்சுகின்றார், ஒறு நூறு அன்றோ, |
வானவரும்
நடுக்கங்கொண்டு வணங்கும் தெய்வ வரங்களால் உயர்ந்து
வானுலக அரசியாக விளங்கும் மரியாள், நாம் பாவ நிலையிலிருந்து
மாறாமலிருந்தும் மனக் கூனல் நிறைந்த அகந்தை தணியாத குணத்தை
அறிந்து நாணுமாறு, தான் அளவிடற்கு அரிய தாழ்மை என்னும்
புண்ணியத்தைக் கைக் கொண்டாள் என்று காட்டும் பொருட்டு, வண்டுகள்
சென்று அருந்தும் மலர் இனத்துள்ளே தோற்றத்தால் புன்மைகொண்டு, தன்
தேனாலும் மணத்தாலும் எம் மலரையும் வெல்லும் காட்டில் நிறைந்துள்ள
மகிழம் பூவால் தொடுத்த ஒரு நூறு மாலைகளை எட்டாம் அணியாய் நின்ற
வானவர் அவள் அடியில் களிப்பு ஓங்க இட்டு வணங்குகின்றனர்.
குணிக்க + அரிய
- 'குணிக்கவரிய' என வரவேண்டியது, 'குணிக்கரிய'
எனத் தொகுத்தல் விகாரம் கொண்டது.
|