| 58 |
வஞ்சஞ்சேர்
தந்திரத்தாற் பழியே விஞ்ச
மன்னுயிர்கட் பகைத்தழிக்குங் குணுக்கி னங்கள்
நெஞ்சஞ்சேர் நஞ்சுகுப்ப வெடுத்த நாக
நெடுந்தலையை யென்றொடையா னேரா வல்லாள்
கஞ்சஞ்சேர் திருப்பதத்தால் மிதித்த வெற்றி
காட்டமதுக் கான்றநறுந் தும்பை மாலை
பஞ்சஞ்சே ருவப்பினொடு பைம்பொன் சேர்ந்த
பதத்தணியாய்த் தொழுதணிந்தா ரொருநூறன்றோ. |
| |
வஞ்சம் சேர்
தந்திரத்தால் பழியே விஞ்ச
மன் உயிர்கட் பகைத்து அழிக்கும் குணுங்கு இனங்கள்
நெஞ்சம் சேர் நஞ்சு உகுப்ப எடுத்த நாக
நெடுந் தலையை, என் தொடையால் நேரா வல்லாள்,
கஞ்சம் சேர் திருப் பதத்தால் மிதித்த வெற்றி
காட்ட, மதுக் கான்ற நறுந் தும்பை மாலை,
பஞ்சம் சேர் உவப்பினோடு பைம் பொன் சேர்ந்த பதத்து
அணியாய்த் தொழுது அணிந்தார், ஒரு நூறு அன்றோ. |
எனது பாவினால்
ஒப்புக்கூற இயலாத வல்லமை கொண்ட மரியாள்,
வஞ்சனை பொருந்திய தந்திரத்தால் பாவமே மிகுமாறு மனித உயிர்களைப்
பகைத்து அழிக்கும் பேய்க் கூட்டங்கள் தம் நெஞ்சிற் பொருந்தியுள்ள
நஞ்சைக் கக்குவதற்கென்று எடுத்துக் கொண்ட பாம்பு உருவத்தின் நெடிய
தலையைத் தன் தாமரை மலர் போன்ற திருவடிகளால் மிதித்த வெற்றியை
எடுத்துக் காட்டும் பொருட்டு, தேனைப் பொழித்த நறுமணம் பொருந்திய
நூறு தும்பை மாலைகளை, வானுலகிற்கு உரிய மகிழ்ச்சியோடு, பசும்
பொன்னுக்கு ஒப்பான அடிகளுக்கு அணிகலனாக ஒன்பதாம் அணியாய்
நின்ற வானவர் தொழுத வண்ணம் அணிந்தனர்.
தும்பை,
போருக்குரிய மாலையெனினும், இங்கு அதன் விளைவாகிய
வெற்றி குறித்து நின்றது. பாவத் தூண்டுதலாக அதன் இன்பத்தை மிகுத்துக்
காட்டித் தண்டனையை மறைத்தும், புண்ணியத் தடுப்பாக அதன் துன்பத்தை
மிகுத்துக் காட்டிப் பரிசை மறைத்தும் தந்திரம் செய்வதனால், 'வஞ்சம் சேர்
தந்திரம்' எனப்பட்டது, குணுங்கு + இனம் - குணுக்கினம்.
|