| 60 |
வையகத்தார்
வடு தீர்ப்ப விவட்கோர் மைந்தன்
வந்தபிரா னருட்புரிந்து வஞ்ச மிக்கோர்
கையகத்தா லடியுண்டு மாள்வா னென்னாக்
கடுமரமோ டாணியுமுண் முடியுந் தூணு
மொய்யகத்தா லடுமற்றக் கருவி யாவு
மூவறுவா னவரொருபால் கையி லேந்தி
மெய்யகத்தா ளுள்ளுருக முன்னர் நின்றார்
விளம்பரிய வெந்தைதயை வாழ்த்தி நின்றார். |
| |
வையகத்தார்
வடு தீர்ப்ப இவட்கு ஓர் மைந்தன்
வந்த பிரான் அருள் புரிந்து, வஞ்சம் மிக்கோர்
கை அகத்தால் அடியுண்டு மாள்வான் என்னா,
கடு மரமோ ஆணியும் முள்முடியும் தூணும்
மொய் அகத்தால் அடும் மற்றக் கருவி யாவும்
மூ அறு வானவர் ஒரு பால் கையில் ஏந்தி,
மெய் அகத்தாள் உள் உருக முன்னர் நின்றார்; |
விளம்பு
அரிய எந்தை தயை வாழ்த்தி நின்றார். உலகத்தாரின் பாவ
வடுவைப் போக்கவென்று இவளுக்கு ஒரு மகனாகக் கருவுற்று வந்துள்ள
ஆண்டவன் கருணை கூர்ந்து, வஞ்சகம் மிக்க பகைவர் கைக்கு அகப்பட்டு
அடிக்கப்பட்டு இறப்பான் என்று காட்ட, ஒரு பக்கம் பதினெட்டு வானவர்
தம் கைகளில் கொடிய சிலுவை மரத்தோடு ஆணியும் முண்முடியும் தூணும்
உடலில் மொய்த்து உள்ளே புகுந்து வருந்தும் பிற கருவிகள் யாவும்
ஏந்திக்கொண்டு, உண்மையைச் சார்ந்த மரியாளின் உள்ளம் உருகுமாறு
முன்னே வந்து நின்றனர்; நின்று, சொல்லுதற்கு அரிய நம் தந்தையாம்
ஆண்டவனின் இரக்கத்தை வாழ்த்தி நின்றனர்.
கசையடியும் கையடியும்
ஆணியடியும் போன்ற எல்லாம் அடங்க,
'அடியுண்டு' என்றார். தூண் - இயேசுவைக் கட்டி வைத்து அடித்த கற்றூண்.
'மற்றக் கருவியாவும்' ஈட்டி முள்முடி போன்றவை. இது, வாணுலக இன்
பத்தினிடையே இவ்வுலகத் துன்பமே மரியாளின் பங்கென்று
வெளிப்படையாகவும், அதுவே தன் பங்குமென்று சூசைக்குக் குறிப்பாகவும்
காட்டியவாறு.
|