| 61 |
ஏரிறகா றோரொருவர்
கொண்டு தோன்றி
யேழெழுவாய்ப் பத்தணியாய் நின்ற வானோ
ரீரிறகா லஞ்சனிர்போல் முகத்தை மூட
வீரிறகா லடிமூட மற்றி ரண்டு
சீரிறகா றென்றலுந்தண் ணிலாவுங் காலச்
செழும்பைம்பொற் சாமரைபோல் விசித்தி ரட்டப்
பாரிறகா வளத்தோங்கு மரசா டன்றாள்
பணிந்துபணிந் தருத்தியெழுச் சூழ்ந்து நின்றார். |
| |
ஏர் இறகு ஆறு
ஓர் ஒருவர் கொண்டு தோன்றி,
ஏழ் எழு ஆய்ப் பத்து அணியாய் நின்ற வானோர்,
ஈர் இறகால், அஞ்சினர் போல், முகத்தை மூட,
ஈர் இறகால் அடிமூட, மற்று இரண்டு
சீர் இறகால் தென்றலும் தண் நிலாவும் காலச்
செழும் பைம் பொன் சாமரை போல் விசித்து இரட்ட, |
பாரில் தகா
வளத்து ஓங்கும் அரசாள் தன் தாள் பணிந்து பணிந்து,
அருத்தி எழச் சூழ்ந்து நின்றார். ஒவ்வொருவரும் அழகிய ஆறு இறகுகள்
கொண்டு தோன்றி அணிக்கு எவ்வேழாகப் பத்து அணியாய் நின்ற எழுபது
வானோர் அச்சம் கொண்டவர் போல் இரண்டு இறகுகளால் தம் முகத்தை
மூடவும், இரண்டு இறகுகளால் தம் கால்களை மூடிக்கொள்ளவும், வேறு
இரண்டு சிறந்த இறகுகளால் தென்றற் காற்றும் குளிர்ந்த ஒளியும்
பொழியுமாறு செழுமையான பசும் பொன் போன்ற சாமரைபோல் புடைத்து
அடித்துக் கொள்ளவும் செய்தனர். இவ்வுலகத்து இயல்போடு பொருந்துதல்
இல்லாத வரத்தின் வளங்களால் ஓங்கும் அரசியாகிய மரியாளின் அடியில்
விழுந்து விழுந்து வணங்கி, ஆசை மேலோங்கச் சூழ்ந்து நின்றனர்.
ஆறு இறக்கைகள்
கொண்ட வான தூதர் பழைய ஏற்பாட்டில்
(இசையாஸ், 6 : 1-3) குறிப்பிடப்படுகின்றனர். அங்கு ஆண்டவர்
அரியணைமுன் இருந்த வான தூதரை இங்கு மரியன்னையின்முன்
இருக்கச்செய்ததும், அங்கு இரண்டு இறக்கைகளால் பறந்தனர் என்று
சொல்லப்பட்டதை இங்கு இரண்டு இறக்கைகளால் சாமரை வீசினர் என்று
தமிழ் மரபு கருதிக் கூறியதும் முனிவர் செய்த மாற்றங்கள்.
|