பக்கம் எண் :

முதற் காண்டம்437

                  62
செம்பொன்மேற் பசும்பொன்னா லெழுதி னாற்போல்
     திண்கவச மேலணிகள் தியங்கித் தோன்றப்
பைம்பொன்மேற் பயிற்றியமா மணியா லெல்லை
     பாய்மகுடம் புனைந்தலகை முனைந்து வென்ற
வெம்பொன்மேற் கதிர்ந்தவைவேல் கையி லேந்து
     மிக்கயலும் கபிரியலாந் திருவல் லோனு
மம்பொன்மேற் றவழுருக் கொண் டாங்கு லாம்பே
     ரணிகளிரு தலைவரேனத் தோன்றி னாரே.
 
செம் பொன் மேல் பசும் பொன்னால் எழுதினாற் போல்,
    திண் கவச மேல் அணிகள் தியங்கித் தோன்ற,
பைம் பொன் மேல் பயிற்றிய மா மணியால் எல்லை
    பாய் மகுடம் புனைந்து, அலகை முனைந்து வென்ற,
வெம் பொன் மேல் கதிர்ந்த வை வேல் கையில் ஏந்து
    மிக்கயலும், கபிரியல் ஆம் திரு வல்லோனும்,
அம் பொன் மேல் தவழ் உருக்கொண்டு, ஆங்கு உலாம்
    பேர் அணிகள் இரு தலைவர் எனத் தோன்றினாரே.

     செம்பொன் தகட்டின்மேல் பசும்பொன்னால் எழுத்துக்களைப்
பொறித்தாற்போல, தாம் மார்பில் அணிந்த பொற்கவசத்தின் மேல்
அணிகலன்கள் விளங்கித் தோன்றவும், பசும்பொன்னாற் செய்து
மேலெல்லாம் பதித்த சிறந்த மணிகளால் ஒளியைப் பரப்பும் மகுடம்
அணிந்தும், பேயை முற்பட நின்று வென்ற, காய்ச்சிய பொன்னினும்
மேலாகக் கதிரொளி வீசிய கூர்மையான வேலைக் கையில் தாங்கிய
மிக்கயல் என்ற வானவனும், கபிரியேல் என்னும் திருவல்லோன் ஆகிய
வானவனும் அழகிய பொன்னிறம் உடல் மேலெல்லாம் தவழும் உருவம்
எடுத்துக்கொண்டு, அங்கு உலாவிய வானவர் பேரணிகளின் இரு
தலைவராக வந்து தோன்றினர்.

     மிக்கயல் வானதூதரின் தலைவர் (ப. ஏ., தானியேல் ஆகமம்,
10 : 3, 21; 12 . 1; பு. ஏ., திருவெளிப்பாடு, 12.7; தேம்பாவணி, 14 . 18)
கபிரியல் 5 : 26; 8 : 1, 2 காண்க.