பக்கம் எண் :

முதற் காண்டம்438

                  வானவர் அணிவகுப்பு

       புளிமா, கருவிளம், கருவிளம், கருவிளம், புளிமா, கருவிளம்,
கருவிளம், கருவிளம்
 
            63
இவரு மலதுள வமரரு மளவில்
     தெரியு வெளிசை யிரிபல சுடரொளி
கவரு முடிகளு நவமணி யணியொடு
     ககன வெழிலணி பணிகளு மிகவொளி
துவரு முடனுள பலநிற மலரணி
      தொடையல் மதுமழை குமிழிக ளெழவிழ
நிவரு மணியணி குடையொடு கொடிகளு
     நிறைய வெளிவெளி நிரை நிரை நிகழ்வரே.
 
இவரும் அலது, உள அமரரும் அளவு இலது,
           எரியும் வெளி மிசை இரி பல சுடர் ஒளி
கவரும் முடிகளும் நவமணி அணியொடு
           ககன எழில் அணி பணிகளும் மிக ஒளி,
துவரும் உடன் உள பல நிற மலர் அணி
           தொடையல் மது மழை குமிழிகள் எழ விழ,
நிவரும் மணி அணி குடையொடு கொடிகளும்
           நிறைய வெளி வெளி, நிரை நிரை நிகழ்வரே.

     ஆயிரம் வானவரும் அவர்தம் தலைவர் இருவருமாகிய இவர்களும்
அல்லாமல், வேறுள்ள வானவரும் அளவற்ற தன்மையாய், ஒளிரும்
வானவெளியில் சஞ்சரிக்கும் ஞாயிறு முதலிய பல சுடர்களின் ஒளியையும்
கவர்ந்து கொள்ளும் முடிகளும் ஒன்பது வகை மணிகள் பொருந்தியதோடு
வானுலக அழகையும் சேர்த்து அணிந்த அணிகலன்களும் ஒளியை
மிகுதியாகப் பொழியவும், செந்நிறமும் அதனோடு கூடிய பல நிறமும்
கொண்ட மலர்களால் அழகுறத் தொடுத்த மாலைகள் தேன் மழையைக்
குமிழிகள் எழுமாறு பொழியவும், மணிகள் பதித்து உயர்ந்து தோன்றும்
குடைகளோடு கொடிகளும் ஆகாய வெளி முழுவதும் நிறையவுமாக,
அணியணியாக நடை போடுவர்.

     நவ மணிகள் : 1 : 18 காண்க. நிறம் 5 : வெண்மை, கருமை, செம்மை,
பொன்மை, பசுமை.