பக்கம் எண் :

முதற் காண்டம்439

               64
அலையி னலைவலை மிசையிசை வனவென
                வரச ருருவுட னணியணி நெரிதர
நிலையி னுளமுர சொடுமுள கருவிகள்
                நிகரி லுயருல் குளபல கருவிகள்
மலையி னுயரின முகிலதிர் வனவென மலிய முழகின
                வினியன வொலியொடு
கலையி னுயரின தொடை தொடை தொடர்வன கனிய
                வினவென துரையடை கருமமோ.
 
அலையின் அலை அலை மிசை இசைவன என அரசர்
             உருவுடன் அணி அணி நெரிதர,
நிலையின் உள முரசொடும் உள கருவிகள்
              நிகர் இல் உயர் உலகு உள பல கருவிகள்
மலையின் உயர் இன முகில் அதிர்வன என மலிய முழகின
             இனியன ஒலியொடு
கலையின் உயரின தொடை தொடை தொடர்வன கனிய,
              இன எனது உரை அடைகருமமோ?

     கடலில் அலைகளின் மேல் அலைகள் பொருந்துவது போல்
அரசருக்குரிய உருவத்தோடு வானவர் அணிகளோடு அணிகள் நெருங்கவும்,
இவ்வுலகிலுள்ள முரசோடு மற்றுமுள்ள இசைக் கருவிகளும் நிகரற்ற
மேலுலகிலுள்ள பல கருவிகளும் சேர்ந்து மலையின் உச்சியில் கூட்டமான
மேகங்கள் முழங்குவது போல் மிகுதியாக முழங்கிய இனிய ஓசையோடு
கலைகளிலெல்லாம் உயர்ந்த எதுகை முதலிய தொடைகளால் அமைந்த
பாக்களைத் தொடர்ந்து கனிவாகப் பாடவும், இவையெல்லாம் எனது
உரையால் கூறுவதென்பது இயலும் செயலோ?

     முழகின - 'முழங்கின' என்பது இன்னோசைப் பொருட்டு ஓர் எழுத்து
இடையே குறைந்து நின்றது.