பக்கம் எண் :

முதற் காண்டம்441

அரவின் உருவொடு கடி விடு விடம் அற அரிதில் உயிர்
                      தரும்இனிது அமுது இவள் என,
இரவின் இருளினும் வடு தரும் இருள் அற இரவி ஒளியினும்
                    ஒளிர் சுடர் இவள் என,
உர இழிவும் அற உயிர் அடும் இகல் உற உறுதி இவள்
                      என, உயிர் இவள் என, விரி
புரவில் நிகர் இல தயவின் நிகர் இல புணரி இவள் என
                    அறைகுவர், சிலருமே.

     அவ்வானவருட் சிலர், பாம்பின் உருவத்தோடு வந்து பேய் கக்கிய
பாவ நஞ்சு நீங்குமாறு அரிய விதத்தில் மனிதர்க்கு உயிர் தரும் இனிய
அமுது இம்மரியாள் எனவும், இரவின் இருளைக் காட்டிலும் குற்றம் தரும்
பாவ இருள் அற்றுப் போகுமாறு பகலவன் ஒளியினும் மேலாக ஒளிரும்
சுடர் இவள் எனவும், நெஞ்சின் இழிவு அறவும் உயிரைக் கொல்லும் பகை
அறவும் உறுதிநிலை இவள் எனவும், உயிர் இவள் எனவும், விரிந்த
ஈகையிலும் நிகரற்ற தயவிலும் தனக்கு நிகர் எவரும் இல்லாத கடல் இவள்
எனவும் பாராட்டிக் கூறுவர்.
 
               67
கடியி னெடிதம ரெழவுயிர் மெலிகுவர்
     கவலை யடைகுவர் மகரில வுளைகுவர்
மிடியின் மெலிகுவர் பிணிகளின் மெலிகுவர்
     வெருவி யுருகுவர் விளிவுறி யயர்குவர்
குடியின் மெலிவொடு மிருமையி னிழிவொடு
     குழைய வழுகுவர் கலுழுவர் மடிகுவர்
படியி னனையவ ருதவிய நலமலி
     பரவை யிவளென மொழிகுவர் சிலருமே.
 
கடியின் நெடிது அமர் எழ உயிர் மெலிகுவர்,
           கவலை அடைகுவர், மகர் இல உளைகுவர்,
மிடியின் மெலிகுவர், பிணிகளின் மெலிகுவர்,
           வெருவி உருகுவர், விளிவு உறி அயர்குவர்,
குடியின் மெலிவொடும் இருமையின் இழிவொடு குழைய
           அழுகுவர், கலுழுவர், மடிகுவர்.
படியின் அனையவர் உதவிய நலம் மலி பரவை
           இவள் என, மொழிகுவர், சிலருமே.