ஓசையோடு
எழுந்த திரைகளை வீசி எறிந்த வெள்ளம் மோதியது
போல், ஆசையால் எழுந்த மகிழ்ச்சி உள்ளே அடங்கக்கூடாத தன்மையாய்,
சூசை, வானில் எழுந்து உயர்ந்து நின்ற தன் துணைவியின் துதிகளைத் தன்
மலர்க்கொடி சொரியும் தேனைப் போல் தூவி, வணக்கம் பொருந்திய
மணமுள்ள மதுவைப்போன்ற அழகிய மொழிகளை ஆரவாரம்
எழும்படியாகப் பின் வருமாறு எடுத்துக் கூறினான்:
'ஆல்' அசைநிலை.
கலோலம் - 'கல்லோலம்' என்பதன் இடைக்குறை.
உடன்றல் - உடலுதல். இதன் பகுதி 'உடல்'. இங்கு 'உடன்று' என்பது பகுதி
என்பதாய்க் கொண்டு, 'அல்' விகுதி கூட்டித் தொழிற் பெயர்
அமைக்கப்பட்டுள்ளது. செல் - சேறு எனவும், சொல் - சொற்று எனவும்
பகுதியாய் வந்துள்ளமை ஒப்பு நோக்குக.
75 |
நீயொரு
தாயொரு தாதையு நீயுயிர் நீயெவை யாகிலுநீ
நீய்கனி வார்கடல் நீயொளி யார்சுடர் நீயரு ளார்முகில்நீ
நீயிறை யோனெழு மாசன நீநெறி வேதம்வ ழாநெறிநீ
நீய்முகி ழாதந றாமலர் நீநிறை நூனிக ராவுருநீ. |
|
"நீ ஒரு தாய்;
ஒரு தாதையும் நீ; உயிர் நீ; எவை ஆகிலும் நீ.
நீய் கனிவு ஆர் கடல்; நீ ஒளி ஆர் சுடர்; நீ அருள் ஆர்
முகில்
நீ.
நீ இறையோன் எழும் ஆசனம்; வேதம் வழா நெறி நீ.
நீய் முகிழாத நறா மலர்; நீ நிறை; நூல் நிகரா உரு நீ. |
"நீயே
எனக்கு ஒரு தாய்; ஒரு தந்தையும் நீ; உயிரும் நீ; நல்லவை
எவையாகிலும் அவையெல்லாம் நீயே. இன்பம் நிறைந்த கடலும் நீ; ஒளி
நிறைந்த சுடரும் நீ; நீ அருள் நிறைந்த மேகம். ஆண்டவன் வீற்றிருக்கும்
ஆசனமும் நீயே; ஒழுக்க நெறியும் நீ; தவறாத வேத நெறியும் நீயே.
மொட்டு விரியாத தேனுள்ள மலரும் நீயே; நிறையும் நீ; நூல்களாலும்
ஒப்புமை கூற இயலாத உருவமும் நீயே.
இரண்டாம்
நான்காம் அடிகளின் முதற்கண் 'நீ' என்பது, எதுகை
ஓசைப் பொருட்டு 'நீய்' என நின்றது. 'முகிழாத நறா மலர்' என்ற கன்னிமை
கெடாத கருப்பத்தைக் கருதியது; 'நிறை' என்றது, சென்ற இடத்தாற்
செலவிடா தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பதாகிய புலனடக்கத்தைக் குறித்தது. |