பக்கம் எண் :

முதற் காண்டம்449

                   76
ஏரணி யேயித யத்திலி ருந்தெனை யாளுடை யானவளே
சீரணி யேமதி வெண்குடை யேதிரு மாரிவி டும் புயலே
யாரணி யேகரு ணாகரி யேயுயிர் யாவும ளித்தமுதார்
வாரணி யேதனி நாயகி யேநனி வாழுதி வாழுதியே.
 
"ஏர் அணியே, இதயத்தில் இருந்து எனை ஆள் உடை
                                        ஆனவளே,
சீர் அணியே, மதி வெண் குடையே, திரு மாரி விடும் புயலே,
ஆரணியே, கருணாகரியே, உயிர் யாவும் அளித்த அமுது
                                        ஆர்
வாரணியே, தனி நாயகியே, நனி வாழுதி, வாழுதியே!

     "அழகிய அணி போன்றவளே, என் இதயத்தில் குடிகொண்டிருந்து
என்னை அடிமையாய் உடைமை கொண்டவளே, சிறப்புகளுக்கெல்லாம்
அணியாய் விளங்குபவளே, குளிர்ச்சி தருதலில் மதி போன்ற வெண்கொற்றக்
குடையாய் அமைந்தவளே, செல்வத்தை மழையாகப் பொழியும் மேகம்
போன்றவளே, வேத வடிவானவளே, கருணைக்கு இருப்பிடமாய்
விளங்குபவளே, உயிர்கள் யாவற்றையும் காத்தலில் அமுதம் நிறைந்த கடல்
போன்றவளே, ஒப்பற்ற தலைவியே, நீ நன்கு வாழ்வாயாக, வாழ்வாயாக!

     கருணாகரி - கருணை + ஆகரி. ஆகரம் - இருப்பிடம்.
 
                  77
வாழிய னந்தத யாபர னுக்குரி வாய்ந்தரு டாயவளே
வாழிவி சும்பிடை வாழுய ரும்பரின் வாமவி ராக்கினியே
வாழிமு கிண்டில பூவனை கன்னிய மாதரை யாளரசே
வாழிய ழுந்தரு ளேமறை யேயற னேநனி வாழுதியே.