பக்கம் எண் :

முதற் காண்டம்451

     என்று இவ்வாறெல்லாம் சூசை மரியாளைப் புகழ்ந்து கூறினான்;
அவ்வாறு புகழ்ந்து புகழ்ந்து, இவற்றை எண்ணி மகிழ்ந்து
கொண்டிருந்தபோது, மேலே நின்று கொண்டிருந்த வானவர் அடைந்த
நிறைந்த நிகரற்ற தெய்வக் காட்சியைப் போலவே, தான் தனது என்ற
பற்றுக்கள் நீங்கிய தவத்தோனாகிய சூசை, தன் பெருமை வாய்ந்த நெஞ்சில்
எழுச்சி கொள்ளுமாறு, அங்கு வந்து தோன்றிய கடவுளின் முகத்தை
மறைவில்லாமல் தெளிவாக மேலே கண்டான்.
 
                   79
மேவரு மீவரு மாணொடு வேய்ந்தபி தாசுத னேயனெனு
மூவரு மோர்நிக ராதப ராபர மாமுத லோன்முயலோர்
தாவரு மாமுறை யால்மறை யாதுரு வேய்ந்துத யாபமெழா
வாவரு மாதவ னீதுயர் காணள வாநய னோரளவோ.
 
மேவு அரு மீ வரும் மாணொடு வேய்ந்த பிதா சுதன் நேயன்
                                   எனும்
மூவரும் ஓர் நிகராத பராபரம் ஆம் முதலோன் முயல் ஓர்
தாவு அரு மா முறையால் மறையாது உரு வேய்ந்து தயாபம்                                    எழா
ஆவு அரு மாதவன் ஈது உயர் காண் அளவு ஆம் நயன் ஓர்
                                   அளவோ?

     அடைவதற்கரிய வானுலகிற்கு உரிய மாண்போடு பொருந்திய பிதா
சுதன் நேயன் என ஆள் வகையில் மூவருமாய், தெய்வத் தன்மையில்
தனக்கு நிகரற்ற ஒரே பராபரப் பொருளுமாகிய ஆதி காரணனாகிய
கடவுள் செய்த ஒரு கேடு இல்லாத சிறந்த முறையால், தன்னை மறைத்துக்
கொள்ளாமல் உருவம் தாங்கிக் கருணையோடு எழுந்து தோன்றவே, ஆவல்
கொண்ட அரும் பெருந் தவத்தோனாகிய சூசை இதனை வானத்தில் கண்ட
அளவில் கொண்ட இன்பத்திற்கு ஓர் அளவும் உண்டோ?

     பிதா, சுதன், நேயன் - தந்தை, மகன், தூய ஆவி. ஆள் வகையில்
மூவர் எனப்படினும், ஞானத்திலும் சித்தத்திலும் வல்லபத்திலும் தெய்வ
இயல்பிலும் சரிசமானமாய் ஒருங்கு இணைந்த ஒரே கடவுள். தந்தை
மகனிடையே விளங்கும் நேயத்தின் வடிவம் தூய ஆவி. "நேயமாம் பிரீத்து
சாந்து" என முன் வந்துள்ளதும் காண்க (7:16). எழா - 'எழுந்து' எனப்
பொருள்படும் இறந்த கால வினையெச்சம், 'எழ' என்னும் பொருளில் நின்றது.