பக்கம் எண் :

முதற் காண்டம்453

     என் உயிரை ஆள்பவனாகிய ஆண்டவன், மண் விண் பாதாளம் என
எண்ணப்பட்ட மூன்று உலகங்களிலும் நிறைந்துள்ள நிலைபெற்ற உயிர்கள்
எல்லாவற்றையும் தன் உயிரே ஆகுமென்று கருதும் இரக்கத்தோடு நினைவு
கூர்ந்து ஆளும் ஒரு நிலைபெற்ற அரசி இவளே என்று மதித்த தன்மையாய்,
வானில் உலாவும் ஒளிக்கெல்லாம் உயிராகிய அவள் தலையின்மீது, மின்னிய
எண்ணற்ற விண்மீன்களின் ஒளியையெல்லாம் ஏவிக் கூட்டிச் சேர்த்து, ஓர்
ஒளி முடியைச் சூடினான்.

     உள்ளினன் ஆளும் - உள்ளி ஆளும்: முற்றெச்சம்.

                  திருமகன் காட்சி

     - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்.
 
             82
முழுது ணர்ந்தருள் முற்றிய மாமுனி
பழுது ணர்ந்தப னிப்பற விற்றையப்
பொழுது ணர்ந்தமை யாற்புக லற்றினி
தழுது ணர்ந்தவை யாரறை வாரரோ.
 
முழுது உணர்ந்து அருள் முற்றிய மாமுனி,
பழுது உணர்ந்த பனிப்பு அற, இற்றை அப்
பொழுது உணர்ந்தமையால் புகல் அற்று, இனிது
அழுது உணர்ந்தவை ஆர் அறைவார் அரோ?

     கருப்பம் பற்றிய செய்தியெல்லாம் முழுதும் உணர்ந்து தெய்வ
அருளிலும் முதிர்ந்த சிறந்த முனிவனாகிய சூசை, முன்பு தான் அதற்குப்
பழுது கருதியதனால் ஏற்பட்ட துன்பம் அறவே நீங்கி, இதனை
அப்பொழுது நினைந்து கொண்டமையால் பேச வாய் அற்று, தனக்குள்
அழுத வண்ணம் இனிதாய் உணர்ந்தவற்றை யார் எடுத்துக் கூற
வல்லவராவார்?

     'அரோ' அசைநிலை.