85 |
கஞ்ச
மோவிரைக் கஞ்சமுண் முத்தமோ
விஞ்சு பான்மதி யோவிரி செஞ்சுட
ரெஞ்சு பானியல் போவென வோவள
னெஞ்சு வாழ்குப காணுட னீர்மையே. |
|
கஞ்சமோ, விரைக்
கஞ்சம் உள் முத்தமோ,
விஞ்சு பால் மதியோ, விரி செஞ் சுடர்
எஞ்சு பான் இயல்போ, எனவோ, வளன்
நெஞ்சு வாழ்குப காண் உடல் நீர்மையே? |
சூசை தன் நெஞ்சு
வாழுமாறு கண்ட அவ்வுடலின் தன்மை தாமரை
மலர் தானோ? மணம் உள்ள தாமரை மலருக்குள் பொருந்திய முத்தோ?
பால் ஒளி மிகுந்த மதி தானோ? விரித்த செந்நிறக் கதிர்கள் பெருகிய
கதிரவனின் இயல்பான தோற்றமோ? வேறு என்ன என்று தான்
சொல்வதோ?
86 |
கண்ட
நாயகன் கண்ணொழு குங்கதி
ருண்ட மாதவ னொள்ளொளி யுண்டதோர்
சண்ட தூயப ளிக்குயர் தாணெனா
விண்ட வானொளி வெஞ்சுடர் வெல்லுமால். |
|
கண்ட நாயகன்
கண் ஒழுகும் கதிர்
உண்ட மா தவன், ஒள் ஒளி உண்டது ஓர்
சண்ட தூய பளிங்கு உயர் தாணு எனா
விண்ட வான் ஒளி, வெஞ் சுடர் வெல்லும் ஆல். |
தான் கண்ட ஆண்டவனின்
கண்களினின்று பாயும் கதிரொளியைத்
தன் கண்களால் உண்ட பெருந் தவத்தோனாகிய சூசை, விளக்கமான
ஒளியைப் பெற்றுக் கொண்ட ஒரு பெரிய தூய பளிங்கினாற் செய்த
உயரமான தூண் போல வெளிப்படுத்திய மிக்க ஒளி, வெப்பம் தரும்
சுடரான பகலவனையும் வென்றுவிடும்.
'ஆல்' அசை நிலை.
|