87 |
சீர்த்த
பூங்கொடி யோன்றிரு நாதனைப்
பார்த்த வேலையிற் பார்த்தன னாயக
னேர்த்த வாசையிற் கண்ணெதிர்ப் பட்டெழுங்
கூர்த்த வார்வமுங் கூறுத லாங்கொலோ? |
|
சீர்த்த பூங்
கொடியோன் திரு நாதனைப்
பார்த்த வேலையில், பார்த்தனன் நாயகன்:
நேர்த்த ஆசையின் கண் எதிர்ப்பட்டு, எழும்
கூர்த்த ஆர்வமும் கூறுதல் ஆம்கொலோ? |
சிறந்த
மலர்க் கொடியை உடையவனாகிய சூசை திருமகனாகிய
ஆண்டவனைப் பார்த்த அதே வேளையில், ஆண்டவனும் அவனைப்
பார்த்தான்: ஒன்றுபட்ட ஆசையோடு அவ்விருவர் கண்ணும் எதிர்ப்பட்டு,
அதனால் எழும் மிகுந்த ஆர்வத்தை எடுத்துக் கூறவும் இயலுமோ?
நேர்தல், கூர்தல்
என்பன, செய்யுள் ஓசைப் பொருட்டு, நேர்த்தல்,
கூர்த்தல் என நின்றன. ஆம் கொலோ - இடையே 'கொல்' அசைநிலை.
88 |
தண்ணந்
தாமரை தாதவி ழச்சுடர்
கண்ணங் காங்கதி ராற்கனி பார்த்தெனா
விண்ணங் காவலன் பார்த்துவி ழைந்துளத்
தெண்ணந் தாவுணர் வின்பொடு ணர்த்தினான். |
|
தண் அம் தாமரை
தாது அவிழச் சுடர்
கண் அங்கு ஆம் கதிரால் கனி பார்த்து எனா,
விண் அம் காவலன் பார்த்து விழைந்து, உளத்து
எண்ணம் தாவு உணர்வு இன்பொடு உணர்த்தினான்: |
குளிர்ச்சி
கொண்ட அழகிய தாமரையின் இதழ்கள் விரியுமாறு
ஆதவன் அங்குத் தன் கண்களாகிய கதிர்களால் கனிவோடு
பார்த்ததுபோல், விண்ணுலகிற்கு அழகிய காவலனாகிய ஆண்டவன்
சூசையை ஆசையோடு நோக்கி, அவன் உள்ளத்தில் எண்ணத்தையெல்லாம்
கடந்த உணர்வுகளை இன்பத்தோடு பின் வருமாறு உணர்த்தினான்:
|