பக்கம் எண் :

முதற் காண்டம்457

              89
விண்ட பூங்கொடி தந்தவி ருப்புட
னுண்ட மாமணத் துன்றுணை பூங்கொடி
கொண்ட மாட்சிகு ணிக்கருங் காட்சியாற்
கண்ட தாமறை காட்டிய மாண்பினோய்.
 
"விண்ட பூங் கொடி தந்த விருப்புடன்
உண்ட மா மணத்து உன் துணை பூங் கொடி
கொண்ட மாட்சி குணிக்க அருங் காட்சியால்
கண்டது ஆம், மறை காட்டிய மாண்பினோய்!

     "வேத மேன்மையை வாழ்ந்து காட்டிய மாண்புள்ளவனே, அரிதாய்
மலர்ந்த மலர்க்கொடியை உனக்கு நான் தந்த விருப்பத்தோடு நீ கொண்ட
திருமணத்தால் உனக்குத் துணைவியாய் அமைந்த பூங்கொடி போன்ற
மரியாள் தன்னுள் கொண்டுள்ள மாண்புகளையெல்லாம் கருதுவதற்கு அரிய
காட்சிப் பொருளாகவே கண்டது உனக்குக் கிடைத்த பெருமை ஆகும்.

 
             90
இன்ன தன்மையி னாட்கிவ ணீதுணை
துன்னு தன்மையி னாலருள் சூழ்ந்துனக்
குன்னு தன்மையி னாலுண ராவரம்
மன்னு தன்மையி னால்வகுத் தேனரோ.
 
"இன்ன தன் மையினாட்கு இவண் நீ துணை
துன்னு தன் மையினால், அருள் சூழ்ந்து, உனக்கு
உன்னு தன் மையினால் உணரா வரம்
மன்னு தன் மையினால் வகுத்தேன் அரோ.

     "இத்தன்மையுள்ள இக் கன்னிமரியாளுக்கு நீ இவ்வுலகில்
துணையாக அமைந்துள்ள தன்மையால், நான் அருளோடு ஆராய்ந்து,
நினைக்கும் தன்மையால் உணர முடியாத வரங்களை நிலைபெற்ற
தன்மையாக உனக்கு அமைத்துத் தந்தேன்.

     'அரோ' அசைநிலை.