பக்கம் எண் :

முதற் காண்டம்458

              91
கருவி யொன்றில கன்னிப யந்தினு
மருவி யென்னைவ ளர்க்குகைத் தாதையாய்ப்
பொருவி னன்றிபு ணர்ந்திட நானுனைத்
துருவி னேனெனச் சூழ்ந்தொழு கென்றனன்.
 
"கருவி ஒன்று இல கன்னி பயந்தினும்,
மருவி என்னை வளர்க்கு கைத் தாதையாய்,
பொருவு இல் நன்றி புணர்ந்திட, நான் உனைத்
துருவினேன் எனச் சூழ்ந்து, ஒழுகு" என்றனன்.

     "துணைக் கருவி ஒன்றும் இல்லாமல் கன்னியாய் இருந்தே இவள்
என்னைப் பெறுவாளாயினும், என்னை உடனிருந்து வளர்க்கும்
கைத்தாதையாய் நீ இருந்து, அதன் மூலம் ஒப்பற்ற நன்மைகளை நீயும்
அடையுமாறு, நானே உன்னைத் தேடித் தெரிந்து கொண்டேன் என்று
ஆராய்ந்து, அதற்கு ஏற்ப நடந்து கொள்வாய்" என்று திருமகன் கூறி
முடித்தான்.

     'துணைக் கருவி' என்றது இங்குக் கருப்பத்திற்கு வேண்டிய
ஆண் துணையைக் குறித்து நின்றது. கைத் தாதை-வளர்ப்புத் தந்தை.

 
                92
சொரிய மாரிது றுந்தொனி வெள்ளமாய்ப்
பெரிய வார்கலி மேற்பிரண் டாலெனா
வரிய மாதவற் காதிவ ளர்ப்பதற்
குரிய மாவர முற்றுளங் கூர்ந்ததே.
 
சொரிய மாரி துறும் தொனி வெள்ளம் ஆய்
பெரிய ஆர்கலி மேல் பிரண்டால் எனா,
அரிய மா தவற்கு, ஆதி வளர்ப்பதற்கு
உரிய மா வரம் உற்று, உளம் கூர்ந்ததே.

     மழை பொழியவே பெருகும் ஓசையோடு கூடிய வெள்ளம் ஏற்பட்டுப்
பெரிய கடலிற் போய்ப் புரண்டு வீழ்ந்தாற்போல், கடவுளை வளர்ப்பதற்கு
வேண்டிய பெரு வரங்கள் அடையப் பெற்ற அரிய பெரிய தவத்தோனாகிய
சூசைக்கு உள்ளம் சிறந்தது.