பக்கம் எண் :

முதற் காண்டம்459

     பிரண்டால் எனா - பிரளல்: 'புரளல்' என்பது, மோனை நயம்
பற்றிப் போலியாகப் 'பிரளல்' என நின்றது.
 
                93
அண்ணற் கிங்கண மைந்தகைத் தாதையைக்
கண்ணற் கோங்குக ருத்தொடு போற்றியுள்
ளெண்ணற் கேந்திய வாசியி யம்பினார்
வண்ணப் பூமழை வானவர் வாரியே.
 
அண்ணற்கு இங்கண் அமைந்த கைத் தாதையைக்
கண்ணற்கு ஓங்கு கருத்தொடு போற்றி, உள்
எண்ணற்கு ஏந்திய ஆசி இயம்பினார்
வண்ணப் பூ மழை, வானவர், வாரியே.

     ஆண்டவனுக்கு இவ்வுலகில் அமைந்த வளர்ப்புத் தந்தையாகிய
சூசையை வானவர் கருதும் தன்மைக்கும் உயர்வான கருத்தோடு புகழ்ந்து,
பல வண்ணப் பூக்களை மழைபோல் வாரி இறைத்து, தம் உள்ளத்தில்
எண்ணிய அளவிற்கும் உயர்வான வாழ்த்துக்களைக் கூறினர்.
 
              94
சிறைப்ப டுங்கனல் சிக்கென வாய்கிழித்
துறைப்ப டுங்கக னத்தெழ வோங்கல்போ
லறப்ப டுந்தவ னன்புமி குந்துயிர்
புறப்ப டும்பரன் போதலி ருத்திலால்.
 
சிறைப் படும் கனல் சிக்கென வாய் கிழித்து,
உறைப் படும் ககனத்து எழ ஓங்கல் போல்,
அறப் படும் தவன் அன்பு மிகுந்து உயிர்,
புறப் படும், பரன் போதல் இருத்து இலால்.

     சிறைப்படுத்தி மூடி வைத்த நெருப்பு விரைவில் ஒரு பக்கமாய்
அம்மூடியைக் கிழித்துக் கொண்டு, மேகங்களைக் கொண்ட வானத்தில்
எழுந்து உயர்வதுபோல், அறநெறிப்பட்ட தவத்தோனாகிய சூசையின் உயிரும்
அன்பு மிகுந்து, போதலைத் தடுத்து ஆண்டவனே இருத்தியிரா விட்டால்,
உடலினின்று வெளிப்பட்டு வான் நோக்கிச் சென்று சேர்ந்திருக்கும்.