பக்கம் எண் :

முதற் காண்டம்467

               9
நீரளாம் புணரிசூழ் நீண்டபா ருலகமுங்
காரளாங் கதிரளாங் காயவா னுலகமுஞ்
சீரளாங் கருவியில் லாதுசெய் தனவிதத்
தேரளா முறைமையீங் கின்றுகண் டனனியான்.
 
"நீர் அளாம் புணரி சூழ் நீண்ட பார் உலகமும்,
கார் அளாம் கதிர் அளாம் காய வான் உலகமும்,
சீர் அளாம் கருவி இல்லாது செய்தன விதத்து
ஏர் அளாம் முறைமை ஈங்கு இன்று கண்டனன் யான்.

     "நீர் நிறைந்த கடல் சூழ்ந்த நீண்ட மண்ணுலகத்தையும், மேகங்களும்
சுடர்களும் நிறைந்த ஆகாயம் எனப்படும் வானுலகத்தையும், எக்கருவியின்
துணையும் இல்லாமல் ஆண்டவன் சிறப்புப் பொருந்திய விதமாய்ப் படைத்த
அழகு பொருந்திய முறைமையை நான் இங்கு இன்று கண்டறிந்தேன்.

     எக்கருவியின் துணையுமில்லாமல் மண்ணையும் விண்ணையும்
படைத்த ஆண்டவன், ஆண் துணையின்றிக் கருப்பம் அமைக்கவும்
வல்லவன் என்பதைக் கண்கூடாகக் கண்டு தெளிந்தமை கூறியது இது.
அளாம்-'அளாவும்' என்பதன் இடைக்குறை. காயம் - 'ஆகாயம்' என்பதன்
முதற்குறை. கண்டனன் + யான் - கண்டனனியான்: வருமொழி
யகரத்தின் முன் நிலைமொழி மெய் இகரம் பெற்றது.

 
               10
ஈறிலா செகமெலா மேத்துமோ ரிறையவன்
மாறிலாத் தயையினால் வந்துகா ரணமிலா
பேறிலாத் தகவிலாப் பேதையா மெனையுனாற்
றாறிலாத் திருவுறத் தான்றெரிந் தனனிதோ.
 
"ஈறு இலா செகம் எலாம் ஏத்தும் ஓர் இறையவன்,
மாறு இலாத் தயையினால் வந்து, காரணம் இலா,
பேறு இலாத் தகவு இலாப் பேதையாம் எனை, உனால்,
தாறு இலாத் திரு உறத் தான் தெரிந்தனன், இதோ!