பக்கம் எண் :

முதற் காண்டம்469

 
"தாயும் நீ; தலைவி நீ; தாழ்வு இலாத் தயவு எலாம்
ஈயும் நீ; பரியும் நீ; இட்ட என் குறை எலாம்
தேயும் நீ; கருணை ஆம் சேயொடு அன்பு அலையினுள்
தோயும் நீ; எனையும் நீ ஆள்" எனாத் தொழுது உளான்.

     "எனக்குத் தாயும் நீ; தலைவியும் நீ; குறையற்ற தயவெல்லாம்
எனக்குத் தருபவளும் நீ; எனக்குப் பரிவு காட்டுபவளும் நீ; செய்த என்
குறைகளை யெல்லாம் தேய்ப்பவளும் நீ; கருணை வடிவமான உன்
மகனோடு அன்புக் கடலில் தோய்ந்து கிடப்பவளும் நீ; இத்தகைய நீ
என்னையும் ஆட்கொள்வாய்" என்று சூசை அவளைத் தொழலாயினான்.

     ஈயும், தேயும், தோயும் என்ற சொற்கள், பெயரெச்சப் பொருளில்
நின்று, வினை முதலாகிய 'அவள்' என்ற சொல் வருவிக்கப் பெற்று,
வினையாலணையும் பெயருக்கு உரிய ஈபவள், தேய்ப்பவள், தோய்பவள்
என்ற பொருளில் நின்றன.

               பணி செய்ய முந்தும் இருவர்

 
               13
பற்றறுத் துட்டிறற் பற்றருட் பொற்பினான்
சொற்றலுற் றிட்டவச் சொற்செருப் பட்டபோ
துற்றழற் பட்டதொத் துட்டிகைத் தொப்பிலா
துற்றகத் துட்டகச் சொக்கினாள் சொற்றுவாள்.
 
பற்று அறுத்து, உள் திறல் பற்று அருள் பொற்பினான்
சொற்றல் உற்றிட்ட அச் சொல் செவிப் பட்ட போது,
உற்ற அழல் பட்டது ஒத்து உள் திகைத்து, ஒப்பு இலாது
உற்று, அகத்துள் தகச் சொக்கினாள், சொற்றுவாள்:

     அகப்பற்று புறப்பற்று என்னும் இரு வகைப் பற்றையும் அறுத்து, தன்
உள்ளத்தில் வல்லமை வடிவான ஆண்டவனைப் பற்றிக்கொண்ட, அருளால்
அழகு பெற்ற சூசை சொன்ன அச் சொல் செவியில் பட்ட போது,
ஒப்பில்லாத வரங்களைப் பெற்று அதற்கேற்ப அழகு பூண்டிருந்த மரியாள்,
மிக்க நெருப்பு தன்மீது பட்டது போல் திகைத்துப் பின்வருமாறு
சொல்லுவாள்: