பக்கம் எண் :

முதற் காண்டம்472

என்று அவள் சொல்லவே, தாழ்மையின் பெருமையை அடைவதற்கென்று
அவ்விருவரும் தமக்குள் பின்னிடாத தன்மையாய்ப் போட்டி
போட்டுக்கொண்டு, வானவரும் தம் உள்ளத்தில் பெரிதும் வியக்குமாறு
பிரிந்து சென்று, அப்போதைக்கு உரிய பணிவிடைத் தொழிலைச் செய்ய
அம்மேலோர் ஒருவரையொருவர் முந்திக்கொள்வர்.

 
                     17
வீழ்வா ரியினாற் குழிநீர் வீயா துறைகின் றென்னாச்
சூழ்வா ரில்லாற் றொடர்தீ தறியா தாள்வா ரல்லால்
வாழ்வா ரில்லை யென்பார் மாணா மண்ணோர் மனத்திற்
றாழ்வா ருயர்வா ரெனவித் தக்கார் தண்மை விழைவார்.
 
வீழ் வாரியினால் குழி நீர் வீயாது உறைகின்று என்னாச்
சூழ்வார் இல்லால், தொடர் தீது அறியாது, ஆள்வார் அல்லால்
வாழ்வார் இல்லை என்பார் மாணா மண்ணோர், மனத்தில்
தாழ்வார் உயர்வார் என இத் தக்கார் தண்மை விழைவார்.

     குழியே தன்னுள் வந்து விழும் வெள்ளத்தினால் நீர் குறையாது
நிலைபெறுகின்றது என்று ஆய்ந்து காண்பார் இல்லாமையாலும்,
செல்வத்தைத் தொடரும் தீமையைப் பற்றி அறியாமையாலும், ஆளும்
அரசரேயல்லாமல் இன்பமாய் வாழ்வார் வேறு எவரும் இல்லையென்று,
மாண்பில்லாத மண்ணுலகச் சார்புடையோர் கருதுவர். மனத்தில் தாழ்மை
உடையோரே உயர்வர் என அறிந்த தக்கோராகிய இவ்விருவரும்
தாழ்மையையே விரும்புவர்.

     'மனத்தில் தாழ்வார் உயர்வார்' - 'எளிய மனத்தோர் பேறு
பெற்றோர்' (மத். 5:3) 'தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்;
தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப் பெறுவான்' (லூக். 18:14) போன்ற
இயேசு பெருமான் கூற்றுகள் இங்குச் சுருங்கக் கூறப்படல் காண்க.