பக்கம் எண் :

முதற் காண்டம்477

     செந்நிறக் கதிர்களை உடைய கதிரவன் உதிப்பதற்கு முன்னரே
ஆயிரக்கணக்கான வண்டுகள் வந்து தாமரையின் குளிர்ந்த இதழ்களைத்
தாமே குடைந்து ஊறிய தேனை உண்ணும் தன்மை போல், ஒளி
பொருந்திய இதழ்கள் விரிந்த மலர்க் கொடியை உடையவனாகிய சூசை
உறங்குதலும் இன்றி, அவளது தாமரை மலர் போன்ற கண்கள் திறந்து
விழிப்பதற்கு முன்னரே நான் எழுந்து, விரும்பும் வேலைகளையெல்லாம்
தானே செய்வதில் ஈடுவடுவான்.

     'ஆயிரம்' என்பதனைச் செஞ்சுடருக்கு அடையாக்குதலும்,
'உறங்கின்றவள்' என்பதனை இடைக்குறை விகாரமாய் நின்ற ஒரு
சொல்லாகக் கொண்டு மரியாளுக்கு உரிமையாக்குதலும் பொருந்துமேற்
கொள்க.

 
                     24
முயலா தொன்றுண் டென்றால் முடுகி முடிப்பக் கேட்பாள்
புயலா ருடுவார் குழலா ளவனும் புரிபுன் னகையா
லியலா துனக்கென் றுமறுத் திடைவான் பொருள்போக்
கியகால் மயலா மென்னா மனநொந் தழுவாள் வானோர்க்
                                         கரசாள்.
 
முயலாது ஒன்று உண்டு என்றால் முடுகி முடிப்பக் கேட்பாள்,
புயல் ஆர் உடு ஆர் குழலாள். அவனும், புரி புன்னகையால்,
"இயலாது உனக்கு" என்று மறுத்து, இடை வான் பொருள்
                                         போக்கியகால்
மயல் ஆம் என்னா, மனம் நொந்து அழுவாள் வானோர்க்கு
                                         அரசாள்:

     விண்மீன்கள் பொருந்திய மேகம் போன்ற கூந்தலை உடைய மரியாள்,
சூசை ஈடுபடாத தொழில் ஒன்று உண்டென்றால் தானே அதனை விரைந்து
முடிக்க வேண்டி அவனைக் கேட்பாள். அவனும், செய்யும் புன்னகையோடு,
"அதுவெல்லாம் செய்ய உனக்கு இயலாது" என்று மறுக்கவே, மிக்க
பொருளை இடையே தொலைத்த காலத்து மயக்கம் அடைவது போல,
வானவர்க்கு அரசியாகிய மரியாள் மனம் நொந்து அழுவாள்:

     'இயலாது' என்பதனைத் 'தகாது, என்று பொருள் செய்வதும்,'
'புரி புன்னகையால்' என்பதனைப் 'பொருள் புரிந்த புன்னகையால்' என்று
பொருள் கொள்வதும் ஒன்று.