25 |
சேயா
யெளிமைக் கொளியா குதற்கே சென்றாய் திருவோய்
தாயா யடியாட் கெளிமைத் தகைமை வேண்டா தென்னோ
தூயா யிந்தன் றிலதேற் றுஞ்சா துயிர்க்கோர் நிலையோ
வீயா வருளே மகவே யென்னா விழைவுற் றயர்வாள். |
|
"சேய் ஆய் எளிமைக்கு
ஒளி ஆகுதற்கே சென்றாய், திருவோய்!
தாய் ஆய், அடியாட்கு எளிமைத் தகைமை வேண்டாது என்னோ?
தூய் ஆய் இந் நன்று இலதேல், துஞ்சாது உயிர்க்கு ஓர் நிலையோ?
வீயா அருளே, மகவே!" என்னா விழைவு உற்று அயர்வாள். |
"செல்வம் மிக்கவனே,
தாழ்மைக்கு ஒளி உண்டாகுவதற்காகவே நீ
மகனாய் அவதரித்து வந்தாய். உனக்குத் தாயாக இருந்தும், உனது
அடியாளாகிய எனக்கு அத்தாழ்மையின் சிறப்பைத் தர விரும்பாதது
ஏனோ? தூய்மை அடைவதற்கு வழியான இந்த நன்மை எனக்கு
இல்லையேல், என் உயிருக்கு மடியாதிருக்க ஒரு நிலைக்களம் உண்டோ?
என் மகனே, மடியாதிருக்க நீயே எனக்கு இதனை அருள்வாய்" என்று,
பணி செய்தலையே விரும்பிச் சோர்வாள்.
இது மரியாள்
தன் வயிற்றில் இருந்த மகனை நோக்கி வேண்டியது.
'இந்நன்று' என்றது, மனையாளுக்கு உரிய பணிகளைச் செய்வதனால்
அடையும் புண்ணியமாகிய நன்மை.
26 |
அயர் வாள்
தாயோ வென்னா வன்போ டிரக்குற் றஞ்சேய்
துயர்வா டகமே துன்பற் றலரத் தூதே வியவோ
ருயர்வா னவனுற் றொருநாள் வளனப் பணியைச் செய்யப்
பெயர்வா யினகாற் பிழிவாய் மலரே பிளிரச் சொல்வான். |
|