பக்கம் எண் :

முதற் காண்டம்48

                   62
நக்களவாய் நயன்கொண்ட நாட்டுநல நாடியகால்
மக்களவா மேனலங்கொள் வானுலக நாடேமோ
வானுலக நாடேமேல் மன்னுயிர்மன் னயன்வெஃகக்
கானுலகங் காட்டுநல மக்கவலை மாற்றுவதோ.
 
''நக்கு அளவாய் நயன் கொண்ட நாட்டு நலம் நாடியகால்,
மக்கள் அவா மேல் நலம் கொள் வான் உலகம் நாடேமோ?
வான் உலகம் நாடேமேல், மன் உயிர் மன் நயன் வெஃக,
கான் உலகம் காட்டும் நலம் அக் கவலை மாற்றுவதோ?''

     ''நாவினால் நக்கும் அளவாக நன்மையைக் கொண்ட இந்நாட்டு
நலத்தை விரும்பிய காலத்து, மக்களின் ஆசைகளுக்கும் மேலாக நலம்
கொண்டுள்ள வானுலகத்தைத் தேடாது அமைவோமோ?' அவ்வாறு
வானுலகத்தைத் தேடாது அமைவோமாயின், நிலை பெற்ற மானிட உயிர்
நிலை பெற்ற நன்மையையே விரும்பிக்கொண்டிருக்க, காடாகிய
இவ்வுலகம் காட்டும் நலம் அக்கவலையை மாற்றும் தன்மையது ஆகுமோ?''
 
                     63
பண்கனிந்த நரம்புளரிப் பாணிசைகள் பாடலெனாக்
கண்கனிந்த கவினல்வார் களிகூர்ந்தின் னதும்பலவுந்
தண்கனிந்த தேனிசையாற் சாற்றலொடு பல நாளும்
விண்கனிந்த வின்புண்பார் விழைவோங்க வந்நாடே.
 
பண் கனிந்த நரம்பு உளரிப் பாண் இசைகள் பாடல் எனா,
கண் கனிந்த கவின் நல்லார் களிகூர்ந்து, இன்னதும் பலவும்
தண் கனிந்த தேன் இசையால் சாற்றலொடு, பல நாளும்
விண் கனிந்த இன்பு உண்பார், விழைவு ஓங்க அந்நாடே.

     வீணையின் கனிந்த நரம்புகளைத் தடவிப் பாணரே இசைகளைப்
பாடுவதுபோல், கண்ணுக்குக் கனிவான அழகுள்ள அம்மகளிர் களிப்பு
மிகுந்து, இதுவும் வேறு பலவும் குளிர்ச்சி கனிந்த தேன் போன்ற
இசையால் புகழ்ந்து சொல்லுதலோடு, அந்நாடு வானுலக ஆசையில்
ஓங்குமாறு, விண்ணுலகினின்று கனிந்த பேரின்பத்தைப் பல நாளும்
நுகர்வர்.