பக்கம் எண் :

முதற் காண்டம்488

தீமை விளைவிப்பனவென்று அவற்றை அறவே விலக்கி, தெய்வ அருள்
தம்மிடம் தங்குமாறு அவ்விருவரும் முற்றிலும் எளிமைக் கோலமே பூண்டு
விளங்கினர்.

     "ஊத்தைக் குழியிலே மண்ணை எடுத்து உதிரப் புனலிலே உண்டை
சேர்த்து, வாய்த்த குயவனார் செய்த பாண்டம் வறை யோட்டுக்கு
ஆகாதென்று ஆடு பாம்பே" என்ற பாம்பாட்டிச் சித்தர் வாக்குப்படி (60),
மண்ணால் ஆகியமையும் இறந்தொழியும் இயல்பும் நோக்கி உடலை
மட்பாண்டத்திற்கு ஒப்பிடுதல் மரபு.

 
                41
பானு டைக்கொடு பான்மதிப் பாவலும்
மீனு டைத்குட முந்தனில் வேய்ந்தபின்
கானு டைத்தொடை யோகல னோதகா
வானு டைத்தளம் வாழ்த்தர சாட்கரோ.
 
பானு உடைக் கொடு, பால் மதிப் பாவலும்
மீன் உடைக் குடமும் தனில் வேய்ந்த பின்,
கான் உடைத் தொடையோ கலனோ தகா,
வான் உடைத் தளம் வாழ்த்து அரசாட்கு அரோ.

     ஆதவனை ஆடையாக உடலில் அணிந்துகொண்டு, பால் போன்ற
மதியை மிதியடியாகக் காலிலும், விண்மீன்களாலாகிய மகுடத்தைத்
தலையிலுமாகத் தன்னை அழகு செய்தபின், வானுலகத்திலுள்ள வானவர்
படையெல்லாம் வாழ்த்தும் அரசியாகிய மரியாளுக்கு, மணமுள்ள மலர்
மாலைகளோ வேறு அணிகளோ வேண்டாதன ஆகும்.

     குடம் - 'மகுடம்' என்பதன் முதற்குறை. 'அரோ' அசை நிலை.

 
                  42
வான்பொ ழிந்தவின் பெய்திலர் மண்ணிடை
தேன்பொ ழிந்தவை யின்பெனத் தேடுவார்
கான்பொ ழிந்தக னிக்கடு பாய்ந்தபின்
னூன்பொ ழிந்தவு டற்கினி தேதென்பார்.