பக்கம் எண் :

முதற் காண்டம்489

 
'வான் பொழிந்த இன்பு எய்து இலர் மண்ணிடை
தேன் பொழிந்தவை இன்பு எனத் தேடுவார்;
கான் பொழிந்த கனிக் கடு பாய்ந்த பின்,
ஊன் பொழிந்த உடற்கு இனிது ஏது?' என்பார்.

     'வானுலகிலிருந்து பொழியப்பட்ட பேரின்பத்தின் சுவையை
அடையப் பெறாதவர்களே இம்மண்ணுலகில் சிற்றின்பமாகிய தேனைப்
பொழிந்தவற்றையெல்லாம் இன்பமென்று கருதித் தேடி அலைவர்; மணம்
பொழிந்த விலக்கப்பட்ட கனியின் நஞ்சு பாய்ந்த பின், ஊனால் ஆகிய
இவ்வுடலுக்கு இன்பம் பயப்பது ஏதேனும் உண்டோ?' என்று அவ்விருவரும்
கருதுவர்.

 
                43
என்று தம்பசி மாற்றிட வுண்கிலர்
பொன்று தம்முயிர் போக்கில் துண்பரால்
பின்று தம்மிறை யோன்பெரி தூட்டிய
தொன்று தம்முளத் துண்டினி தோங்குவார்.
 
என்று, தம் பசி மாற்றிட உண்கிலர்;
பொன்று தம் உயிர் போக்கு இலது உண்பர்ஆல்;
பின்று, தம் இறையோன் பெரிது ஊட்டியது
ஒன்று தம் உளத்து உண்டு இனிது ஓங்குவார்.

     என்று மேலே காட்டியவாறு எண்ணி, தம் பசியை மாற்றும் இன்பம்
கருதி அவ்விருவரும் என்றும் உணவு கொள்வாரல்லர்; மடியும் இயல்புள்ள
தம் உயிர் உண்ணாமை காரணமாகப் போய்விடுதல் இல்லாத அளவிற்கே
உண்ணுவர்; அவ்வாறு குறைத்து உண்ட பின்னும், தம் ஆண்டவன்
மிகுதியாகத் தமக்கு ஊட்டியதாகிய ஓர் உணவைத் தம் உள்ளத்தால் உண்டு
இன்பத்தில் உயர்ந்து நிற்பர்.

     பசியின் அளவும் உடலின் தேவையும் கருதாது, வாயுணர்வின்
மாக்களாய்ச் சுவை கருதிப் பெரிது உண்போரை விலக்கி, அளவோடு
உண்பாரும் பசியை நீக்கலும் உயிரை ஆக்கலுமாகிய இரு பயன் கருதி
உண்பர். சூசையும் மரியாளும் முதல் நோக்கத்தை விடுத்து, இரண்டாம்
நோக்கத்திலும் உயிரைப் போக்காது காத்தலையே அளவாகக்
கொண்டனர். அவர்கள் உள்ளத்தால் உண்ட உணவு என்பது
'உங்களுக்குத் தெரியாத உணவு ஒன்று எனக்குள்ளது' என்ற இயேசு
பெருமான் (அரு. 4:32) கூற்றுக்கிணங்க, தேவதிருவுள்ளம் நிறைவேற்றல்,
தேவஅருள் ஆகும்.