பக்கம் எண் :

முதற் காண்டம்490

               44
புவிய ருந்திய புன்மிடி யூங்கெழச்
செவிய ருந்திய கேள்வியர் தேவரு
ளவிய ருந்தலல் லாதருந் தொன்றிலா
நவிய ருந்திய நல்லுடல் வாடுமால்.
 
புவி அருந்திய புன் மிடி ஊங்கு எழ,
செவி அருந்திய கேள்வியர், தே அருள்
அவி அருந்தல் அல்லாது, அருந்த ஒன்று இலா,
நவி அருந்திய நல் உடல் வாடும் ஆல்.

     தம் செவியால் அருந்திய கேள்வியறிவு கொண்ட சூசையும்
மரியாளும், பூமியை விழுங்கியது போன்ற சிறுமை கொண்ட வறுமை தாம்
தாங்கும் அளவிற்கு மேலாக எழுந்து நின்று வாட்டவே, தெய்வ அருளாகிய
வானக உணவை அருந்துதலே, அல்லாமல், உணவாக அருந்த வேறு
ஒன்றும் இல்லாமல், அழகையே அருந்தி வளர்ந்தது போன்ற தம் நல்ல
உடல்களில் வாட்டம் காண்பர்.

     அருந்த + ஒன்று - 'அருந்தவொன்று' என வரவேண்டியது
'அருந்தொன்று' எனத் தொகுத்தல் விகாரம் கொண்டது. வாடும் - வாடுவர்:
'செய்யும்' என் முற்று பலர் பாலுக்கு வந்தது புதியது புகுதலாகக் கொள்க.
'ஆல்' அசைநிலை, நவி - நவ்வி என்பதன் இடைக்குறை.

 
                 45
சிந்தை தேறிய தேறல்செய் வாகையான்
முந்தை யாயவெ லீயமு னிக்குணா
தந்தை காகைகொ டீந்தன தன்மையா
லெந்தை யின்றுண வீதல்செய் வானென்றான்.
 
சிந்தை தேறிய தேறல் செய் வாகையான்,
"முந்தை ஆய எலீய முனிக்கு, உணா,
தந்தை, காகை கொடு ஈந்தன தன்மையால்
எந்தை இன்று உணவு ஈதல் செய்வான்" என்றான்.