பக்கம் எண் :

முதற் காண்டம்491

     அந்நிலையிலும் மனம் தேறிய தேன் சிந்தும் மலர்க் கொடியை
உடையவனாகிய சூசை, "தந்தையாகிய ஆண்டவன் நம் மூதாதையான
எலீய முனிவனுக்கு ஒரு காக்கையைக் கொண்டு உணவு கொடுத்த
தன்மை போல், நம் தந்தையாகிய ஆண்டவன் நமக்கும் இன்று உணவு
தந்தருள்வான்" என்றான்.

     எலீய முனிக்கு உணவு: அகாபு மன்னன் காலத்துப் பஞ்சத்தில்
கடவுள் எலியாஸ் இறைவாக்கினருக்கு நாள் தோறும் காலையில்
காக்கைகள் மூலம் அப்பமும் ஊனும் தந்து பேணினார்
( அரச., 17 : 1 - 7). முந்தை, எந்தை என்பன முந்து தந்தை, எம்
தந்தை என்பவற்றின் மரூஉ மொழிகள். காகை: காக்கை என்பதன்
இடைக்குறை.

 
                 46
உரைசெ யும்பொழு தொப்பில பாடிய
நிரைசெ யும்பல புள்நெடு நாளுறீஇ
விரைசெ யுங்கனி யீந்துவி ருந்தெனாக்
கரைசெ யுங்கடை யற்றினி துண்பரால்.
 
உரை செயும் பொழுது, ஒப்பு இல பாடிய
நிரை செயும் பல புள், நெடு நாள் உறீஇ,
விரை செயும் கனி ஈந்து, விருந்து எனா
கரை செயும் கடை அற்று இனிது உண்பர் ஆல்.

     இவ்வாறு சூசை உரைக்கும் பொழுதே, ஒப்பற்ற விதமாய்ப் பாடிய
அணியணியான பல பறவைகள் மணம் பொருந்திய கனிகளைக்
கொணர்ந்து தந்தன. இவ்வாறு நெடு நாள் நிகழ்ந்தது. அவ்விருவரும்
அவற்றை விருந்து போல் ஏற்று, எல்லையும் முடிவும் அற்ற இன்பத்தோடு
உண்பாராயினர்.

 
                47
ஏம கத்தரு னாயக னேவியுஞ்
சேம கத்தரு டேறுநல் லோர்பல
யாம கத்தினி னைத்தில தின்னமா
கோம கர்க்குவி ருந்தெதிர் கொள்வரால்.
 
ஏம் அகத்து அருள் நாயகன் ஏவியும்,
சேம் அகத்து அருள் தேறு நல்லோர், பல
யாம் அகத்தில், நினைத்து இலது, இன்ன மா
கோ மகர்க்கு விருந்து எதிர் கொள்வர் ஆல்.