பக்கம் எண் :

முதற் காண்டம்492

     பிறருக்கு நலம் தருமாறு தம் அகத்தில் இயல்பாகக் கருணை
கொண்டு தெளிந்த நல்லோர் சிலர், தன் அடியவர் உள்ளத்திற்கு இன்பம்
அருளும் இயல்பு கொண்ட ஆண்டவன் ஏவுதலினால், பல நள்ளிரவு
வேளைகளில், சிறிதும் நினைத்திராத முறையில், இத்தகைய சிறந்த அரச
குல மக்களுக்கு விருந்து கொணர்ந்து எதிரில் வைப்பர்,

     ஏமம், சேமம், யாமம் என்பன இடைக்குறையாய் ஏம், சேம்,
யாம் என நின்றன.

 
                  48
கொண்ட யாவையும் கொண்டிறை வாழ்த்திமுற்
பண்ட நாள்சிறைப் பட்டுறை தானியற்
கண்ட மேலவ னாங்குழ வன்கொடு
மண்டு ணாகொணர் மாண்பிதெ னாவுண்டார்.
 
கொண்ட யாவையும் கொண்டு, இறை வாழ்த்தி முன்,
"பண்ட நாள் சிறைப்பட்டு உறை தானியற்
கண்ட மேலவன், ஆங்கு உழவன் கொடு
மண்டு உணா கொணர் மாண்பு இது" எனா உண்டார்.

     இவ்வாறு கொண்டு வரப்பட்ட யாவற்றையும் ஏற்றுக் கொண்டு,
முதலில் ஆண்டவனை வாழ்த்தி, "முற்காலத்தில் சிறையில் அடைபட்டுக்
கிடந்த தானியலைக் கண்ட வானவன், ஓர் உழவன் கொண்டு சென்ற
உணவை அங்கே கொணர்ந்து கொடுத்த மாண்புக்கு நிகரானது இது"
என்று சொல்லிக் கொண்டு அவ்விருவரும் உண்டனர்.

     சிறையில் தானியலுக்கு உணவு: பசித்த அரிமாக்கள் நடுவே
சிறைப்பட்டுக் கிடந்த தானியல் இறைவாக்கினர் அவற்றால் ஊறு
நேராதிருந்தும், பசியால் சாவாரென்று கடவுள் ஒரு வானவனை ஏவ,
அவ்வானவன் உழவருக்கு உணவு கொண்டு சென்ற ஓர் உழவன்
தலைமயிரைப் பற்றிப் பிடித்துப் பறந்து சென்றான்; உழவன்
தானியலுக்கு உணவு படைத்தபின், மீண்டும் அவனைப் பற்றிக்கொண்டு
போய்ப் பழைய இடம் சேர்ந்தான். (ப. ஏ., தானியேல் 6 : 6 - 24;
14 : 33 - 39)