பக்கம் எண் :

முதற் காண்டம்498

     உண்ணும் போதே வானவர் தெய்வக் காட்சிகளை ஆடலாகக்
காட்டியும் ஏழிசைப் பாடல்களைப் பாடிக் காட்டியும் இன்புறுத்திக்
கொண்டிருந்தனரென்று கொள்க. இவ்வாறன்றி, கண் கொண்ட
களிப்பினும் செவி கொண்ட பயனினும் மேலாக உணவையே விரும்பினர்
என்ற கருத்துப்படப் பொருள் விரித்தல் சிறவாது. உண் - 'ஊண்'
என்பதன் குறுக்கல் விகாரம்.

               சூசையின் நன்றிக் கனிவு

          - மா, - மா, கூவிளம், தேமா, புளிமாங்காய்

 
                     58
எல்லுஞ் செல்லா வொள்ளொளி யேந்தோ ரெழி லுண்டாய்ச்
செல்லுஞ் செல்லா விண்ணுறை கின்றோர் சிறிதாங்கோ
ரில்லுஞ் செல்லா நின்றன தன்மைத் திவர்தம்பாற்
சொல்லுஞ் செல்லா வுண்ணய முண்டே தொழுதுண்டார்.
 
எல்லும் செல்லா ஒள் ஒளி ஏந்து ஓர் எழில் உண்டு ஆய்,
செல்லும் செல்லா விண் உறைகின்றோர், சிறிது ஆங்கு ஓர்
இல்லும் செல்லா நின்றன தன் மைத்து, இவர் தம்பால்
சொல்லும் செல்லா உள் நயம் உண்டே, தொழுது உண்டார்.

     மேகமும் சென்று அடையாத மேலுலகில் வாழ்கின்ற வானோர்,
பகலவனும் ஈடாகாத விளக்கமான ஒளியைத் தாங்கிய ஓர் அழகிய வடிவம்
கொண்ட தன்மையாய், அங்குள்ள ஒரு சிறு மனையினுள்ளும் சென்று நின்ற
தன்மையால், இவ்விருவரும் தம்மிடத்துச் சொல்லுக்கு அடங்காத மன
இன்பத்தையும் நுகர்ந்து, ஆண்டவனைத் தொழுத வண்ணம்
அவ்வுணவையும் உண்டனர்.

     'எழில்' இங்கு அழகிய வடிவத்திற்கு ஆகு பெயர். 'சிறிது'
இங்குச் சிறிய என்ற பொருளில் நின்றது. செல்லா - மூன்றாமடியில்
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; ஏனைய அடிகளில் ஈறு
கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.