பக்கம் எண் :

முதற் காண்டம்5

பாயிரம்
 

     
     இது தம் காப்பியத்திற்கு முன்னுரையாக ஆசிரியரே அமைத்த
தாதலின், தற்சிறப்புப் பாயிரம் என்க. கடவுள் வணக்கமும் நூலிற்
சொல்லப்படும் பொருளும் போன்றவற்றை எடுத்துக் கூறும்.


                     கடவுள் வணக்கம்

            அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்

                   1
சீரிய வுலக மூன்றுஞ் செய்தளித் தழிப்ப வல்லாய்
நேரிய வெதிரொப் பின்றி நீத்தவோர் கடவு டூய
வேரிய கமல பாதம் வினையறப் பணிந்து போற்றி
யாரிய வளன்றன் காதை யறமுதல் விளங்கச் சொல்வாம்.
 
சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல் ஆய்,
நேரிய எதிர் ஒப்பு இன்றி நீத்த ஓர் கடவுள் தூய,
வேரிய கமல பாதம் வினை அறப் பணிந்து போற்றி,
ஆரிய வளன் தன் காதை அறம் முதல் விளங்கச் சொல்வாம்.

     சிறந்த மூன்று உலகங்களையும் படைத்துக் காத்து அழிக்கவும்
வல்லவனாய், தனக்கு நேராக வேறு உயர்வும் ஒப்பும் இன்றி
யாவற்றையும் கடந்து நின்ற ஒரே கடவுளின் தூய்மையும் நறுமணமும்
கொண்ட தாமரை மலர் போன்ற பாதத்தை நம் பாவ வினை அறுமாறு
வணங்கியும் வாழ்த்தியும், அறங்களால் உயர்ந்தோனாகிய வளனின்
கதையை அறம் முதலிய நாற்பொருளும் விளங்குமாறு சொல்வோம்.

     மூவுலகம் - விண், மண், பாதலம், அறம். முதல் நாற்பொருள் -
அறம், பொருள், இன்பம், வீடு. காதை - கதை தழுவிய பாடல்.

     ''பெருஞ்சிறப்பு அமைந்த உலகங்கள் மூன்றையும் படைத்து
அளித்து அழிப்ப வல்லமை உண்டாய், ஒன்றானும் தனக்கு எதிர் ஒப்பு
இன்றி, பிறரான் அளந்து அறியும் அளவைக் கடந்து நின்ற தேவ
குணங்களில் உயர்ந்து ஒன்றாகிய மெய்யங் கடவுளினது தெய்வ மணம்
நாறும் திருவடித் தாமரைகளை எமது வினைப்பிணி முழுதும் கெட
வாக்கல் தணிவு தோன்ற வாழ்த்தியும், மெய்யால் பணிவு தோன்றப்
பணிந்தும், எவற்றினும் விழுமியோனாகிய சூசையென்னும் வளனது திருக்
கதையைக் கேட்போர்க்கு அறம் முதல் நாற் பொருளும் எளிதிற்
புலப்படச் சொல்வாம்,'' என்பது பழைய உரைக் குறிப்பு.