பக்கம் எண் :

முதற் காண்டம்6

                  காப்பியத் தலைவன்     

                      2
தேவுல கிறைஞ்சுஞ் சூசை தேன்மலர்க் கொடியைப் பூத்து
மூவுல கனைத்து மெஞ்சா முறையொடு நிழற்று நாதன்
பூவுல கெய்தி யன்ன பூநிழற் கொடுங்கிச் சாய்ந்த
யாவுல கனைத்தும் வாழ்த்து மிருங்கதை யியம்பல் செய்வாம்.
 
தே உலகு இறைஞ்சும் சூசை தேன் மலர்க் கொடியைப் பூத்து,
மூ உலகு அனைத்தும் எஞ்சா முறையொடு நிழற்றும் நாதன்
பூ உலகு எய்தி அன்ன பூ நிழற்கு ஒடுங்கிச் சாய்ந்த
யா உலகு அனைத்தும் வாழ்த்தும் இருங் கதை இயம்பல் செய்வாம்.

     தெய்வ உலகுமே வணங்கும் சூசை தேன் நிறைந்த மலர்க்
கொடியைப் பெற்றான். மூன்று உலகங்களையும் குறையாத நீதி முறையோடு
நிழல் செய்து காக்கும் ஆண்டவன் மனிதனாக இப்பூவுலகை அடைந்து,
அந்த மலர்க் கொடியின் அழகிய நிழலில் தங்கித் துயில் கொண்டான்.
இவ்வாறு உலகங்கள் அனைத்தும் வாழ்த்தும் பெருமையுள்ள கதையை
நாமும் சொல்லத் தொடங்குவோம்.

     தேவுலகு சூசையை வணங்குதலாவது, அங்குள்ள வானவரும் மனிதப்
புனிதரும் வணங்குதல் என்று கொள்க. மலர்க்கொடி பெற்றது திருமணப்
படலத்தும், நாதன் பூ நிழற்கு ஒடுங்கியது தொடர்ந்து வரும் படலங்களிலும்
காண்க.

                       3
வளஞ்செயும் வரங்க டம்மால் வரைவில வளர்வ மைந்த
வுளஞ்செயு மரிய மாட்சி யுடையவ னாய தன்மை
நளஞ்செயும் வடநூ லோர்க ணவின்றிவற் சூசை யென்ப
தளஞ்செயுந் தமிழ்ச்சொல் லானு மவன்வள னென்ப
                                  தொத்தே.
 
வளம் செயும் வரங்கள் தம்மால் வரைவு இல வளர்வு அமைந்த
உளம் செயும் அரிய மாட்சி உடையவன் ஆய தன்மை
நளம் செயும் வடநூலோர்கள் நவின்று இவற் சூசை என்பது
அளம் செயும் தமிழ்ச் சொல்லானும் அவன் வளன் என்பது ஒத்தே.