பக்கம் எண் :

முதற் காண்டம்7

     சூசை தன்னை வளப்படுத்தும் தெய்வ வரங்களால் எல்லை இல்லாத
வளர்ச்சி அமைந்து, தன் உள்ளம் அதற்கேற்பச் செயலாற்றும் பெறுதற்கு
அரிய மாட்சி உடையவன். அத்தன்மையைச் சொல்லும் முகமாக விரிவு
கொண்டுள்ள வடநூற் புலவர் இவனைச் சூசை என்று அழைப்பர். அது
நிறைவுகொண்ட தமிழச் சொல்லாலும் அவன் வளன் எனச் சொல்வதனைப்
பொருள் அளவில் ஒத்ததே ஆகும்.

     யோசேபு என்ற எபிரேயப் பெயர் தன் ஒலி அடிப்படையில் சூசை
எனப் பிற மொழிகளிலும், பொருள் அடிப்படையில் வளன் எனத் தமிழ்
மொழியிலும் வழங்குகின்றது என்பது கருத்து. இவன் + சூசை : 'இவனைச்
சூசை' என்ற பொருளில் 'இவற் சூசை' என நின்றது.

                       அவையடக்கம்

                        4
சூசையுற் றனவ ரங்கட் டூய்கடல் கடக்க லில்லா
லோசையுற் றொழுக மிர்த முடைகட லென்ன நண்ணிப்
பூசையுற் றதனை நக்கப் புக்கென வுளத்தைத் தூண்டு
மாசையுற் றூம னேனு மருங்கதை யறைய லுற்றேன்.
 
சூசை உற்றன வரங்கள் தூய் கடல் கடக்கல் இல்லால்,
ஓசை உற்று, ஒழுகு அமிர்தம் உடை கடல் என்ன நண்ணி,
பூசை உற்று, அதனை நக்கப் புக்கு என, உளத்தைத் தூண்டும்
ஆசை உற்று, ஊமனேனும், அருங் கதை அறையல் உற்றேன்.

     சூசை பெற்றுள்ள வரங்களாகிய கடலைக் கடத்தல் என்பது இயலாத
செயல். ஆதலால், முதலில் அதன் ஓசையை உற்றுக் கேட்டு அமைந்தேன்.
பின் அது அலையால் கரைக்கு வந்து ஓடும் அமிர்தத்தை உடைய
கடலென்று கண்டு அணுகினேன். பின்னும் நெருங்க அஞ்சி எட்ட நின்று
வணங்கினேன். அதனைக் கையால் தொட்டு நாவால் நக்கிக்கொள்ள
வேண்டும் போல் உள்ளத்தைத் தூண்டிய ஆசைக்கு ஆட்பட்டேன்.
அதற்குத் துணிந்து புகுத்தாற் போல, நான் இதைப் பொறுத்தமட்டில் ஓர்
ஊமைக்குச் சமமானவனேனும், இவ்வரிய கதையைச் செய்யுளால் சொல்லத்
துணிந்தேன்.