பக்கம் எண் :

முதற் காண்டம்8

     இனி 'ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு, பூசை முற்றவும் நக்குபு
புக்கென,' என வரும் கம்பராமாயண அவையடக்க அடிகளை நினைவிற்
கொண்டு, 'பூசை' என்பதனைப் 'பூனை' என்று கொண்டு உரை கூறலும்
ஒன்று. அது அத்துணைச் சிறப்பின்று என்க. 'இல்லால்' என்றவிடத்து
'ஆல்' 'ஆதலால்' என்பதன் மரூஉ. 'ஊமன்' என்றது தமிழ் தமக்குத்
தாய்மொழியன்மையை நினைவிற்கொண்டு முனிவர் அவையடக்கம் கூறியதாம்.அவையடக்கம் என்பது, புலவன் கற்றோர் அவைமுன் தன்
அடக்கத்தைத் தெரிவித்து அன்பைப் பெறுவதோர் இலக்கிய மரபு.
 
                        5
முறையடுத் தருநூ லோருண் மூழ்கிய வுவப்பி லன்ன
துறையடுத் தள்ளி யுண்ணுந் துணி விலா னென்னை நோக்கிற்
குறையெடுத் தனையென் றன்னார் கொடுஞ்சினத் துறுக்க                                           னன்றே
பறையெடுத் துலகங் கேட்பப் பழித் தெனை நகைக்க னன்றோ.
 
முறை அடுத்து அரு நூலோர் உள் மூழ்கிய உவப்பில், அன்ன
துறை அடுத்து அள்ளி உண்ணும் துணிவிலான் என்னை நோக்கில்,
'குறை எடுத்தனை', என்று அன்னார் கொடுஞ் சினத்து உறுக்கல்                                               நன்றோ?
பறை எடுத்து, உலகம் கேட்பப் பழித்து, எனை நகைக்கல் நன்றோ?

     அரிய நூல்களைக் கற்று வல்ல புலவர் முறையாக அவ்வமுதக்
கடலை அடுத்து அதன் உள்ளே மூழ்கி உண்ட களிப்பினால், அந்தக்
கடலின் கரையை அடுத்துக் கையால் அள்ளியே உண்ணும்
துணிவில்லாதவனாகிய என்னைக் கண்டால், 'நீ உனக்குக் குறைவரத் தக்க
அலுவலில் ஈடுபட்டுள்ளாய்', என்று என்னை அவர்கள் கொடுஞ்சினத்தோடு
அதட்டுதல் நல்லதோ? அதன் மேலும், பறையை எடுத்து அடித்துக் கூட்டி,
உலகமே வந்து கேட்க என்னைப் பழித்து, அதன் பின் தாமும் சேர்ந்து
நகைப்பது நல்லதோ?

     நன்றோ - நன்று + ஓ : ஓகாரம், 'அன்று' என எதிர்மறைப்
பொருள் தந்தது. உலகம் - உலக மக்களுக்கு ஆகுபெயர். உலகம்
என்பது உயர்ந்தோர் மேற்றே எனப்படுதலின், மக்களுள் உயர்ந்தோரைச்
சுட்டியதாகவும் கொள்ளலாம்.