பக்கம் எண் :

முதற் காண்டம்501

                    62
நீர்தோய் பொன்னார் தன்றலை நீட்ட நிசி நீத்தோ
னேர்தோய் மின்னார் பொற்சிறை யம்புள் ளினமெல்லாஞ்
சீர்தோய் தந்நா நின்புகழ் பாடச் செயிரின்றித்
தார்தோய் தேனோ டூண்பல தந்தே தயைசெய்வோய்.
 
"நீர் தோய் பொன் ஆர் தன் தலை நீட்ட நிசி நீத்தோன்,
ஏர் தோய் மின் ஆர் பொன் சிறை அம் புள் இனம் எல்லாம்
சீர் தோய் தம் நா நின் புகழ் பாட, செயிர் இன்றி,
தார் தோய் தேனோடு ஊண் பல தந்தே தயை செய்வோய்!

     "இரவை நீக்குவோனாகிய கதிரவன் கடல் நீரினுள் தோய்ந்த பொன்
மயமான தன் தளையை நீட்டவே, அழகு தோய்ந்த ஒளி நிறைந்த பொன்
போன்ற சிறகுகளை உடைய பறவை இனங்களெல்லாம் ஒலிச் சிறப்பு
நிறைந்த தம் நாவுகளால் உனது புகழைப் பாடிக் கொண்டிருக்குமாறு,
குறைக்கு இடமின்றி, மலர்களில் தோய்ந்து கிடக்கும் தேனோடு பல வகை
உணவுகளையும் தந்து நீ அன்பு காட்டுவாய்!

 
                   63
காய்கான் செல்லென் முந்தைய ருண்ணீர்க் கனிவில்லா
நோய்கான் றீட்டுந் தாகம வித்தே நுகர்வெய்தத்
தீய்கால் கல்லே தீம்புனல் காலத் திரிவார்தம்
வாய்கா னெல்லாம் பின்செல வக்கல் மலிதுண்டார்.
 
"காய் கான் செல் என் முந்தையர், உண் நீர்க் கனிவு இல்லா
நோய் கான்று, ஈட்டும் தாகம் அவித்தே நுகர்வு எய்த,
தீ காய் கல்லே தீம் புனல் கால, திரிவார் தம்
வாய் கான் எல்லாம் பின் செல, அக்கல் மலிது உண்டார்.

      "வெயிலாற் காய்ந்த பாலைவனத்திற் சென்றுகொண்டிருந்த என்
மூதாதையர், உண்ணும் நீரினது கனிவு இல்லாமையால் துன்பம் கொண்டு,
அதனால் பெருகும் தாகத்தை அவித்து அருந்தும் வண்ணம், நெருப்பாய்க்
காய்ந்த பாறையே இனிய நீரைச் சுரக்கவும், அப்பாலைவனத்தில்
அலைந்துகொண்டிருந்த இடமெல்லாம் தானும் அவர்களைத் தொடர்ந்து
செல்லவும், அப்பாறையில் சுரந்த நீரை நிறைவாக உண்டனர்.