பக்கம் எண் :

முதற் காண்டம்502

     கல்லிற் கனிந்த நீர்: எசித்தினின்று சிறை மீண்ட இசுரவேலர் சீன்
என்னும் பாலைவனத்தில் அலைந்து கொண்டிருந்த போது, அருந்த நீர்
கிடையாமல் மோயீசனிடம் முறையிட, அவன் கடவுள் கட்டளையால்
தன் கைக்கோல் கொண்டு பாறையை அடிக்கவும் நீர் சுரந்து அவர்கள்
தாகத்தைத் தணித்தது. (ப. ஏ., யாத்திராகமம், 17:1-7). பாறை அவர்கள்
சென்றவிடமெல்லாம் சென்றதென்பது யூத அறிஞர்கள் நடுவில் வழங்கின
கதையாகும்; அதைப் புனித சின்னப்பர் தமது திருமுகத்தில்
பயன்படுத்துகிறார்: "தங்களைப் பின் தொடர்ந்த பாறையிலிருந்து
பானம் பருகி வந்தனர்." (I கொரிந். 10:4) 'தாகம் அவித்தே நுகர்வு
எய்த' என்பதனை, 'நுகர்வு எய்தித் தாகம் அவிக்க' என மாற்றிப்
பொருள் கொள்க. 'கல் மலிது உண்டார்' என்றவிடத்துக் கல் என்பது
கல்லிற் சுரந்த நீரைக் குறித்தது. இங்குக் குறித்த பாறை ஒரேபு
மலைக்கண் ஒரு பாறை என அறிக.

 
                 64
அன்னா ரந்நா ளவ்வன வாய்வந் தமுதின்றிப்
பன்னா டன்னா லுள்ளிய வின்பம் பலவீந்தோ
ருன்னா நுண்மா தேவவி தந்தாங் கொருகோடி
யின்னா துன்னோ யொன்றில வாழ்ந்தே யினிதுண்டார்.
 
"அன்னார் அந் நாள் அவ் வனவாய் வந்து அமுது இன்றி,
பல்நாள், தன்னால் உள்ளிய இன்பம் பல ஈந்த ஓர்
உன்னா நுண் மா தே அவி, தந்து, ஆங்கு ஒரு கோடி
இன்னா துன் நோய் ஒன்று இல வாழ்ந்தே இனிது உண்டார்.

     "அவ்விசுரவேலர் அலைந்து கொண்டிருந்த அக்காலத்தில் அந்தப்
பாலைவனத்தில் வந்து உண்ண உணவின்றி இருந்தனர். ஒவ்வொருவனும்
தான் தான் நினைந்தவாறு சுவை இன்பத்தைப் பல விதமாய்த் தந்ததும்,
இன்னதென்று கருத இயலாததும், சிறிய வடிவுள்ளதுமான ஒரு சிறந்த
தெய்வ உணவைப் பலநாள் கடவுள் அப்பொழுது அவர்களுக்குத் தந்தார்.
அவ்வனத்தில் ஒரு கோடிப் பேர் துன்பமும் அண்டும் நோயும் ஒன்றும்
இல்லாமல் வாழ்ந்து அவ்வுணவை இன்பமாய் உண்டனர்.

     இசுரவேலர் உண்ட தெய்வ உணவு: இது மன்னா என்று
அழைக்கப்படும். எபிரேய மொழியில் 'இது என்ன?' என்னும் பொருள்
கொண்டது இச்சொல். இது கொத்துமல்லி அளவாய், உறைபனி நிறமாய்,