பக்கம் எண் :

முதற் காண்டம்507

     மாண்புள்ள அவ்வேளையில், அந்தச் சிறு வீட்டை வானவர் தம்
மோட்ச வீட்டிற்கு ஒப்பாகப் பேணினர். அந்நேரம், அது தன்னைக்
காட்டிலும் விளக்கமான ஒளியை மிகுதியாகப் பெற்றது என்று மிக்க
வெப்பங் கொண்ட கதிரவன் கண்டது. கண்ட நேரமே சினத்தால் அதன்
உடல் சிவந்தது, பின், அவ்வீட்டின் ஒளி முன் எதிர்த்து நிற்க இயலாமல்
நாணிய அந்நேரமே கதிரவன் கடலின் கீழ் ஆழத்தில் மூழ்கி மறைந்தது.

     இயல்பாகச் சிவந்து கடலில் மூழ்கும் கதிரவனை, அச்சிறு மனையின்
பேரொளி கண்டு சினந்தும் நாணியும் கடலில் மூழ்கியதாகக் கற்பனை
செய்து கூறியது தற்குறிப்பேற்ற அணியாகும். பெற்ற-'பெற்றது' என்ற
சொல்லின் கடைக்குறை, கடலங்கீழ்: இடையே 'அம்' சாரியை.

                   மரியாள் உணர்வுக் கனிவு

          - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

 
                 71
மாயிரு ஞால மூடு மாசிரா வறவில் வீசிப்
பாயிரு சுடரொ டொத்தார் பகலிரா விலவா னோர்க்கொன்
றாயிரு வருமுள் ளோங்கி யமரர்சூழ் பணிந்து நிற்பக்
காயிரு விசும்பின் மாட்சி காட்டிய மனைய தன்றோ.
 
மா இரு ஞாலம் மூடு மாசு இரா அற வில் வீசிப்
பாய் இரு சுடரோடு ஒத்தார், பகல் இரா இல வானோர்க்கு                                            ஒன்று
ஆய், இருவரும், உள் ஓங்கி, அமரர் சூழ் பணிந்து நிற்ப,
காய் இரு விசும்பின் மாட்சி காட்டிய மனை அது அன்றோ?

     மிகப் பெரிய மண்ணுலகத்தை மூடிக் கொண்டிருக்கும் இருள் செறிந்த
இரவு நீங்குமாறு ஒளி வீசிப் பரப்பும் ஞாயிறு, திங்கள் என்னும் இரு
சுடர்களை ஒத்தவராகிய அவ்விருவரும், பகல் இரவென்ற வேறுபாடு
இல்லாத வானவர்க்கு ஒத்தவராய்த் தம் உள்ளத்தில் எழுச்சி கொண்டு,
வானவர் தம்மைச் சூழ்ந்து வணங்கி நிற்றலால், எப்பொழுதும் ஒளி காயும்
வான் வீட்டின் மாட்சியை இம்மண்ணுலகிற் காட்டி நின்ற சிறு வீடு அதுவே
அல்லவா?