பக்கம் எண் :

முதற் காண்டம்512

                     78

கீழ்வரே சேர்ந்த மேலோர் கீழ்மையே மாறித் தாமுந்
தாழ்வரே யன்றித் தாழ்ந்தார் தகவுற வலிய ராரோ
வாழ்வரே யிறைவற் கொத்த வளமையு முணர்வும் பண்புஞ்
சூழ்வரே பரம னற்றா டொழுதரு குவப்பிற் சேர்ந்தார்.

 
"கீழ்வரே சேர்ந்த மேலோர் கீழ்மையே மாறி, தாமும்
தாழ்வரே அன்றி, தாழ்ந்தார் தகவு உற வலியர் ஆரோ?
வாழ்வரே, இறைவற்கு ஒத்த வளமையும் உணர்வும் பண்பும்
சூழ்வரே, பரமன் நல் தாள் தொழுது அருகு உவப்பின்
                                      சேர்ந்தார்.

     "கீழ் மக்களோடு சேர்ந்த மேலோரும் அக்கீழ்மைக்கே மாறித் தாமும்
தாழ்வாரே அல்லாமல், அக்கீழோரை மேன்மையடையச் செய்யும் வலிமை
உடையோர் யாரும் உளரோ? ஆண்டவனின் நல்ல அடிகளைத் தொழுது
மகிழ்ச்சியோடு அவன் அருகில் சேர்ந்து இருப்பவர் குறை நீங்கிய
நல்வாழ்வு பெறுவர்; அவ்வாண்டவனுக்கு உகந்த வளமும் உணர்வும்
பண்பும் அணிந்து விளங்குவர்.

     ஆண்டவன் அருகிற் சேர்ந்திருத்தலாவது, அவன் கட்டளைப் படி
நன்னெறியில் ஒழுகலாம். 'கீழ்மையே மாறி' என்பதனை நான்காம்
வேற்றுமைத் தொகையாகக் கொண்டு, 'கிழ்மைக்கே மாறி' எனப் பொருள்
விரிக்க.

 
                    79
புருவளர் கதிர்கள் கோலாற் பொறித்ததோர் படத்தின்
                                        சாயல்
மருவளர் மலரும் வாமம் வளரின மணியும் பொன்னு
முருவளர் பருதி தோற்றி யுடைத்தொழி லெஞ்ச நாதன்
றிருவளர் தயையின் சார்பு சீரெலாம் பயக்கு மன்றோ.
 
புரு வளர் கதிர்கள் கோலால் பொறித்துஓர் படத்தின் சாயல்,
மரு வளர் மலரும் வாமம் வளர் இன மணியும் பொன்னும்,
உரு வளர் பருதி, தோற்றி உடைத் தொழில் எஞ்ச, நாதன்
திரு வளர் தயையின் சார்பு சீர் எலாம் பயக்கும் அன்றோ?