|
"அழகு நிறைந்த
ஆதவன், மணம் நிறைந்த மலரையும் அழகு நிறைந்த
பல வகை மணிகளையும் பொன்னையும் மிகுநலம் வளரும் தன் கதிர்களாகிய
எழுதுகோலால் தீட்டிய ஒரு சித்தி ரத்தின் சாயலாகத் தோற்றுவித்துச்
செய்யும் தொழிலும் தோற்குமாறு, செல்வமெல்லாம் வளர்வதற்குக்
காரணமான ஆண்டவனது தயவின் சார்பு எல்லாச் சிறப்புக்களையும்
ஒருங்கே கூட்டுவிக்கும் அல்லவா?
மலரும் மணிகளும் பொன்னும் தம்மீது பகலவன் ஒளிபடும் போது,
பகலவனின் ஒளிக்கதிர்களால் தீட்டிய சித்திரம் போல் விளங்கித்
தோன்றுகின்றன. அதற்கும் மேலாக, ஆண்டவனின் தயவு ஒன்று மட்டும்
சாரப்பெற்ற ஒருவருக்கு எல்லா நலங்களும் ஒருங்கே கிட்டுகின்றன. உள்ள
அழகைப் பெருக்கிக் காட்டுவது பகலவன் தொழிலென்றும், இல்லாத
எல்லாம் ஒருங்கு பயப்பது ஆண்டவனது தயவின் இயல்பென்றும்
வேற்றுமை காண்க.
| 80 |
மெய்விளை
யிடமைந் தின்றி விளங்கிய கடவு ளாகிப்
பொய்விளை பொறிக ளட்டுப் புரைவிளை நசையு மட்டுத்
துய்விளை யுளத்திற் பொங்குந் தொடர்பிற காக ஆக்கி
யைவிளை யுணர்வோ ரல்லா லனந்தனற் பாதஞ் சேரார். |
| |
"மெய் விளை
இடம் ஐந்துஇன்றி விளங்கிய கடவுள் ஆகி,
பொய் விளை பொறிகள் அட்டு, புரை விளை நசையும் அட்டு,
துய் விளை உளத்தில் பொங்கும் தொடர்பு இறகு ஆக ஊக்கி,
ஐ விளை உணர்வோர் அல்லால், அனந்தன் நல் பாதம் சேரார். |
"முடிவில்லாத
ஆண்டவன் தனக்கு உடலும் அதனால் உண்டாகும்
ஐம்புலன்களும் இன்றி விளங்கிய கடவுளாகையால், பொய்யை
விளைவிக்கும் ஐம்பொறிகளையும் அவித்து, குற்றம் விளைவதற்குக்
காரணமான ஆசையையும் அறுத்து, தூய்மை பொருந்திய உள்ளத்தில்
பொங்கி எழும் அன்பை இறகுகளாக அமைத்து ஊக்கங்கொண்டு
பறந்து, நுட்பம் பொருந்திய தெய்வ உணர்வு உடையோர் சென்று
சேர்வாரேயல்லாமல், ஏனையோர் அவ்வாண்டவனின் நல்ல அடிகளிற்
சென்று சேரார். |