| "விண்மீன்களின்
ஒளி முறையையும் கடந்த தெய்வ ஞானத்தை
எடுத்துக் கூறி, எமது உயிர்கள் வாழ்வு பெறும் பொருட்டு, வாள் வாய்ந்த
இடத்து உண்டாகும் புண்ணுக்கு நிகராகத் துன்புறுதல் உனக்கு
இனியதாகுமோ? இசைவாணர் போற்றும் முறையையும் அன்பால் கடந்து
நின்றவனே, எம்மால் உனக்கு இங்கு ஒரு பயனேனும் உண்டோ? எம்மைத்
தேடி நெடுந்தூரம் கடந்து வந்தும் துன்பமே பெறுவாய்" என்று மரியாள்
கூறி முடித்தாள்.
நம்மைத்
தேடி வந்து: 'எம்மை', 'நம்மை' என்ற இரண்டையும்
வேறுபாடின்றி வழங்குதல் முனிவர் மரபு.
| 83 |
தேனுருக்
கோதை யொத்தாள் செப்பிய கனிந்த தீஞ்சொற்
கானுருக் கொடியோன் சாலக் களிப்புறச் செவியின் மாந்தி
யூனுருக் கொண்ட நாத னுணர்ந்திறைஞ் சிருவர் வாழ்த்தி
மீனுருக் கொடுவில் வீச வேதநற் றிலத மொத்தார். |
| |
தேன் உருக் கோதை
ஒத்தாள் செப்பிய கனிந்த தீம் சொல்
கான் உருக் கொடியோன் சாலக் களிப்பு உறச் செவியின் மாத்தி,
ஊன் உருக் கொண்ட நாதன் உணர்ந்து இறைஞ்சு இருவர்
வாழ்த்தி,
மீன் உருக் கொடு வில் வீச, வேத நல் திலதம் ஒத்தார். |
தேன் நிறைந்த
அழகிய மலர் மாலை போன்ற மரியாள் இவ்வாறு
சொல்லிய கனிவான இனிய சொற்களை மணம் நிறைந்த அழகிய
மலர்க்கொடியை உடைய சூசை, மிக்க மகிழ்ச்சியோடு செவிகளால்
அருந்தினான். பின் ஊன் உருவம் கொண்ட ஆண்டவனை மனத்தால்
உணர்ந்து உடலால் வணங்கிய அவ்விருவரும் நாவாலும் வாழ்த்தி,
விண்மீன்கள் போன்ற உருவம் கொண்டு ஒளி வீச நின்று, வேதத்திற்கு
இட்டு வைத்த பொட்டுப்போல் விளங்கினர்.
திலதம்
- திலகம் என்பதன் இடைப் போலி. |